

ஐபிஎல் என்னும் கடினமான பயணங்கள் கொண்ட இந்தியாவின் கடும் வெயில் சீசனில் ஆடப்படும் 2024 தொடர் முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பைத் தொடங்கி விடுகிறது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பையை வைப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. இந்திய வீரர்கள் மட்டுமல்ல ஐபிஎல் தொடரில் ஆடும் அனைத்து நாட்டு வீரர்களுமே மிகவும் களைப்படைந்து விடுவார்கள். இப்படியிருக்கையில் உடனடியாக உலகக் கோப்பையை வைப்பது குறித்து ஐசிசி எந்த ஒரு கவலையையும் படுவதில்லை.
இந்த முறையாவது 2007 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பை ஒன்றை வெல்லுமா என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே, இந்தியாவின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் டி20 உலகக் கோப்பை அணியைத் தன் பார்வையில் தேர்வு செய்துள்ளார்.
இவரது அணியில் ரோகித் சர்மாதான் கேப்டன். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் போதாமை இருந்த போதிலும் சிறிய இலக்குகளை விரட்டி வெற்றி பெறச்செய்வதில் டி20 கிரிக்கெட்டில் விராட் வல்லவர் என்பதால் அவரும் இர்பான் பதான் அணியில் இருக்கிறார். மேலும் விராட் கோலியும் இப்போதைய டி20 அதிரடி வீரர்களைப் போல் எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டுவதில் விருப்பம் தெரிவிப்பது போல் அடிவருகிறார். ஆகவே கோலி மிக முக்கியம் என்கிறார் இர்பான்.
ஆனால் இவரது அணியில் அதற்குள் ரிஷப் பந்தை சேர்க்கிறார். இது பின்னடைவை ஏற்படுத்தினால்... ஏனெனில் இதுவரை ஐபிஎல் தொடரில் நேற்றுதான் ரிஷப் பந்த் அரைசதம் எடுத்துள்ளார். அதுவும் இறங்கும் போது கொஞ்சம் திணறினார். பிறகு அடித்தார். ஆனால் 3ம் நிலையில் அவர் இறங்கியது அவருக்கு பெரிய உதவிகரமாக அமைந்தது. இர்பான் பதான் தன் அணியில் ரிஷப் பந்த், ஜிதேஷ் சர்மா, கே.எல்.ராகுல் என மூன்று விக்கெட் கீப்பர்களைச் சேர்த்துள்ளார்.
ஆனால் இர்பான் பதானின் தனித்துவம் என்னவெனில் இதுவரை யாரும் குறிப்பிடாத இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொஷின் கானை அணியில் தேர்வு செய்துள்ளார். இவர் மணிக்கு 150 கிமீ வேகம் வீசுகிறார். நிச்சயம் நல்ல பவுலர். ஆனால் இவரை விடவும் விக்கெட் எடுப்பதில் வல்லவரான கலீல் அகமதுவுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் கலீல் அகமது பந்து வீச்சில் இப்போது வேகம் மற்றும் ஸ்விங் அதிகமாக இருப்பதோடு கடினமான லெந்த்களில் வீசி அசத்தி வருகிறார். இவரோடு, 155 கிமீ வேகம் பந்து வீசி 2024 ஐபிஎல் சாதனையை நிகழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்வையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.
இர்பான் பதானின் டி20 உலகக்கோப்பை அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜிதேஷ் சர்மா, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஜஸ்ப்ரீத் பும்ரா, மொகமது சிராஜ், மொஷின் கான் / அர்ஷ்தீப் சிங்.