Published : 18 Feb 2018 05:57 PM
Last Updated : 18 Feb 2018 05:57 PM

2018-19ம் ஆண்டில் ‘விராட் கோலி படை’க்கு காத்திருக்கும் சோதனைகள், சவால்கள்...

உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக, 2018-19ம் ஆண்டில் இந்திய அணி பங்கேற்று விளையாடும், சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டி விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்( பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி 30 ஒருநாள் போட்டிகள், 12 டெஸ்ட் போட்டிகள், 21டி20 போட்டிகள் என மொத்தம் 63 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த ஆண்டுக்கான இந்திய அணியின் போட்டித் தொடர் இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருடன் முடிகிறது. அதன்பின், 2018-19ம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்குகின்றன.

ஏப்ரல் மாதத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மே மாதம் வரை நடக்கிறது. அந்த போட்டிகளில் இந்திய அணியின் பெரும்பாலோனோர் விளையாடுவதால், சர்வதேச போட்டிகளில் ஏதும் பங்கேற்கமாட்டார்கள்.

அதன்பின் ஜூன் மாதத்தில் இருந்து இந்திய அணி தனது பயணத்தை தொடங்குகிறது. முதலில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி அந்த நாட்டு அணியுடன் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதே மாதத்தில் பெங்களூரு நகரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்திய அணி பங்கேற்கிறது.

அடுத்தார் போல் இங்கிலாந்துக்கு ஏறக்குறைய 80 நாட்கள் பயணம் மேற்கொள்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி. ஜூலை மாதம் இறுதிவரை இங்கு இருக்கும் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் அடுத்ததாக இந்திய அணி பங்கேற்கிறது. உலகக்கோப்பைப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டபின் ஆசியக்கோப்பை போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட இருப்பதால் இன்னும் தேதிகள் இறுதிசெய்யப்படவில்லை. ஆசியக் கோப்பைப் போட்டியில் ஏறக்குறைய 9ஒருநாள் போட்டிகள் வரை நடக்கிறது.

அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்புகிறது இந்தியஅணி. அக்டோபர் நவம்பர் மாதத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. அந்த அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்படுகிறது. அங்கு செல்லும் கோலி படை, ஆஸ்திரேலியா அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடக்கிறது.

அங்கிருந்து நியூசிலாந்துக்கு இந்திய அணி புறப்படுகிறது. நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது, அது வர்த்தக ரீதியாக ஒளிபரப்பில் லாபத்தை தராது எனத் பிசிசிஐ தெரிவித்துவிட்டதால், அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவில்லை. ஏனென்றால், இந்திய நேரப்படி அதிகாலை 3.30மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்குவதால், ஒளிபரப்பில் வர்த்தரீதியாக லாபம் இருக்காது என கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரை நியூசிலாந்து அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அந்த தொடரை முடித்துக்கொண்டு இந்தியஅணி நாடு திரும்புகிறது.

மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி பயணம் மேற்கொள்கிறது. இங்கு வரும் ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது.

இறுதியாக ஜிம்பாப்பே நாட்டுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித்தொடருடன் இந்திய அணியின் 2018-19ம் ஆண்டு பயணம் முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x