Published : 24 Feb 2018 08:00 AM
Last Updated : 24 Feb 2018 08:00 AM

கொரியாவுடன் ஹாக்கி தொடர்: இந்திய அணிக்கு ராணி ராம்பால் கேப்டன்

கொரியாவுடன் நடைபெறவுள்ள ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரியாவுடன் மார்ச் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கொரியாவிலுள்ள ஜின்சென் தேசிய தடகள மைய மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ராணி ராம்பால் கேப்டனாக இருப்பார். ஆசியக் கோப்பைக்கு வெற்றிக்குப் பிறகு இந்திய மகளிர் அணி முதன்முறையாக கொரியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. இதுகுறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் கூறும்போது, “ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடியது. அதைப் போலவே இந்தத் தொடரிலும் இந்தியா சிறப்பாக விளையாடும்.

இந்த ஆண்டின் முதல் ஹாக்கி தொடர் என்பதால், இந்தத் தொடரை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். இந்தத் தொடரில் வெற்றி கண்டால், அது இந்த ஆண்டில் நடைபெறும் மற்ற போட்டிகளுக்கு பெரிய உத்வேகமாக இருக்கும்.

இந்தத் தொடருக்குப் பிறகு மிகப் பெரிய போட்டிகளில் ஒன்றான காமன்வெல்த் விளையாட்டு நடைபெறவுள்ளது. கொரியா தொடருக்காக அனுபவம், இளமை என்ற விகித்தில் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்திருந்த தீபிகா, பூனம் ஆகியோர் குணமடைந்ததால் அணிக்குத் திரும்பியுள்ளனர். உடற்தகுதித் தேர்வான யோ-யோ டெஸ்டில் வீராங்கனைகள் சிறப்பாக பரிமளித்தனர். அதைத் தொடர்ந்தே அவர்கள் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு பிறகு ராஞ்சியில் நடைபெற்ற தேசியப் போட்டியில் வீராங்கனைகள் தாங்கள் சார்ந்த அணிக்காக சிறப்பான முறையில் விளையாடினர். இந்த உத்வேகம் கொரியாவிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் ” என்றார் அவர்.

அணி விவரம்: கோல்கீப்பர்கள்: ரஜனி எட்டிமார்ப்பு, ஸ்வாதி

டிபன்டர்கள்: தீபிகா, சுனிதா லக்ரா (துணை கேப்டன்), டீப் கிரேஸ் எக்கா, சுமன் தேவி தவுடம், குர்ஜித் கவுர், சுசீலா சானு புக்ரம்பம்.

மிட்பீல்டர்கள்: மோனிகா, நமிதா டாப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல், லீலிமாமின்ஸ், உதித்தா.

பார்வர்ட்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா, லால்ரேம்சியாமி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர், பூனம் ராணி. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x