சிஎஸ்கே பேட்டிங்கில் ஷிவம் துபே உறுதுணை: குஜராத்துக்கு 207 ரன்கள் இலக்கு!
சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது.
ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா அதிரடியுடன் தொடங்கினர். முதல் 5 ஓவர்களில் 58 ரன்களை சேர்த்திருந்தது இந்த இணை.
3 சிக்சர்களை விளாசிய ரச்சின் ரவீந்திரா, ரஷித் கான் வீசிய 6-வது ஓவரில் போல்டாகி 46 ரன்களுடன் வெளியேறினார். அடுத்ததாக களத்துக்கு வந்த ரஹானே, ருதுராஜுடன் கைகோத்தார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்காமல் 12 ரன்களில் விக்கெட்டானார். இனி நேரமில்லை என கருதிய ஷிபம் தூபே வந்த வேகத்தில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி சோர்ந்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.
மறுபுறம் பொறுப்புடன் விளையாடி வந்த ருதுராஜ், ஸ்பென்சர் ஜான்சன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 46 ரன்களில் கிளம்பினார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திராவும், ருதுராஜும் சொல்லி வைத்தார்போல தலா 46 ரன்களில் அவுட்.
15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 155 ரன்களைச் சேர்த்திருந்தது. ஷிவம் துபே - டேரில் மிட்செல் இருந்தனர். துபே தன்னை நோக்கி வரும் பந்துகளை விளாசித் தள்ளிக்கொண்டிருந்தார். மிட்செல் அவருக்கு உறுதுணையாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
5 சிக்சர்கள் விளாசி 51 ரன்களுடன் கட்டுக்கடங்காமல் ஆடிக்கொண்டிருந்த ஷிவம் துபேவின் வேகத்துக்கு தடைபோட்டது ரஷித்கான் வீசிய பந்து. கேட்ச் கொடுத்து வெளியேறினார் துபே. அடுத்து களத்துக்கு வந்த சமீர் ரிஸ்வி வந்த வேகத்தில் 2 சிக்ஸ். மேட்ச் சிஎஸ்கே வசமே இருக்கிறது என்பதை ரசிகர்கள் உணர்ந்தார்கள்.
ஆனால், அவர் தன் பங்குக்கு 14 ரன்களைச் சேர்த்துவிட்டு கடைசி ஓவரில் அவுட்டாகிவிட்டு கிளம்பினார். கடைசி பந்தில் மிட்செல் ரன்அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி 206 ரன்களைச் சேர்த்து, குஜராத் அணிக்கு 207 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும், ஸ்பென்சர் ஜான்சன், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், மோஹித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தனர்.
