

ஜடேஜா-ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் வழங்கப்பட்டுள்ள கார்டன் லீவிஸ் தீர்ப்பின் நகலை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா-இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜடேஜாவை ஆண்டர்சன் கீழே தள்ளியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜடேஜாவுக்கு அவருடைய போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதனிடையே இதுதொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஆண்டர்சன், ஜடேஜா இருவர் மீதும் தவறில்லை என ஐசிசி விசாரணை அதிகாரி கார்டன் லீவிஸ் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆண்டர்சன் எவ்வித தண்டனையுமின்றி தப்பினார். ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேலிடம் கேட்டபோது, “கார்டன் லீவிஸ் தீர்ப்பின் நகலுக்காக காத்திருக்கிறோம். அது நாளைக்குள் (இன்று) வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். தீர்ப்பு நகலைப் பார்த்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய முடியும். அடுத்தகட்ட நடவடிக்கை முன்னதாக தீர்ப்பு நகலை முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.
எங்களுடைய சட்டநிபுணர் குழு தீர்ப்பின் நகலை படித்துவிட்டு எங்களுக்கு ஆலோசனை வழங்கும். இதுபோன்ற பிரச்சினைகளில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகத்துல்லியமாக ஆராய்வது அவசியம். அதற்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவை. அதற்கு முன்னதாக மேல்முறையீடு செய்யப்படுமா என நாங்கள் கூறினால் அது சரியானதாக இருக்காது” என்றார்.
இந்த விஷயத்தில் இந்திய அணி அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்களா என கேட்டபோது, சஞ்சய் பட்டேல் அளித்த பதிலோ, இந்தப் பிரச்சினையை பிசிசிஐ முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது என்பதைக் காட்டுவதாக அமைந்தது. “தீர்ப்பு நகலை பார்க்காமல் இந்த விசாரணை நியாயமற்றது எனக்கூறினால் அது பொருத்தமற்றதாக அமைந்துவிடும்” என்றார் சஞ்சய் பட்டேல்.