சாம் கரன் அசத்தல்: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் @ ஐபிஎல் 2024

சாம் கரன் அசத்தல்: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் @ ஐபிஎல் 2024
Updated on
1 min read

சண்டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்துள்ளது. இதில் சாம் கரன் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு உறுதுணையாக திகழ்ந்தார்.

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.

175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப்புக்கு ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தது. அதிரடி காட்டிய ஷிகர் தவான் 22 ரன்களில் இஷாந்த் சர்மா பவுலிங்கில் போல்டானார். அதே ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் 9 ரன்களில் ரன் அவுட்.

அவர்களைத் தொடர்ந்து களம் புகுந்த பிரப்சிம்ரன் சிங் - சாம் கரன் கூட்டணி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 9-வது ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் சாம் கரன் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு உறுதுணையாக நிற்காமல் 9 ரன்களுடன் ஜிதேஷ் சர்மா கிளம்பினார்.

போட்டி இறுதிக்கட்டத்தில் நெருங்கிக் கொண்டிருந்தபோது, 18-வது ஓவரில் லியாம் லிவிங்ஸ்டனும், சாம் கரனும் அடித்த சிக்சர்ஸ் பஞ்சாப் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

47 பந்துகளில் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு பக்கபலமாக விளங்கிய சாம் கரன், கலீல் அகமது வீசிய பந்தில் போல்டானார். அடுத்த பந்தே ஷஷாங்க் சிங்கும் அவுட். 8 பந்துக்கு 8 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப்.

பதற்றம் தொற்றிக்கொண்ட போட்டியில் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் லியாம் லிவிங்ஸ்டன். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வெற்றிகொண்டது பஞ்சாப். லிவிங்ஸ்டன் 38 ரன்களுடனும், ஹர்ப்ரீத் ப்ரார் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி தரப்பில், குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in