

மகளிர் 400 மீ. ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங் கனை கேத்தி லெடெக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் பான் பாசிபிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள 17 வயது பள்ளி மாணவியான கேத்தி, 3 நிமிடம் 58.37 விநாடிகளில் இலக்கை எட்டி தனது பழைய உலக சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 3 நிமிடம், 58.86 விநாடிகளில் கேத்தி இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருந்தது.
இதுதவிர 800 மீ. ப்ரீஸ்டைல், 1,500 ப்ரீஸ்டைல் போட்டிகளிலும் கேத்தி வசமே உலக சாதனை உள்ளது. 400 மீ. 800 மீ. 1,500 மீ. ப்ரீஸ்டைல் போட்டிகளில் ஒரே நேரத்தில் உலக சாதனையை வைத்திருக்கும் 2-வது வீராங்கனை கேத்தி ஆவார். இதற்கு முன்னர் அமெரிக்க வீராங்கனை ஜானெட் இவான்ஸ் மேற்கண்ட 3 பிரிவுகளிலும் உலக சாதனையை வைத்திருந்தார்.
பான்பசிபிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 200 மீ., 400 மீ., 800 மீ., 4x100 மீ. ப்ரீஸ்டைல் போட்டிகளில் கேத்தி தங்கப் பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.