

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் கோழிக்கோடு ஹீரோஸ், டெல்லி டூபான்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் இன்று மாலை 6.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜெரோம் வினித் தலைமையிலான கோழிக்கோடு ஹீரோஸ் அணி லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் 12 புள்ளிகள் சேர்த்துமுதலிடம் பிடித்தது. இதன் பின்னர் நடைபெற்ற சூப்பர் 5 சுற்றில் மும்பை மீட்டியார்ஸ், பெங்களூரு டார்படோஸ் ஆகியஅணிகளை வீழ்த்தி மீண்டும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து முதன்முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்தது.
அதேவேளையில் அறிமுக அணியான டெல்லி டூபான்ஸ் லீக் சுற்றில் 12 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தது.தொடர்ந்து சூப்பர் 5 சுற்றில் கோழிக்கோடு, பெங்களூரு அணிகளை வீழ்த்தியது. இதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அகமதாபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியானது சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு நடத்தும் கிளப் உலக சாம்பியன்ஷிப் தொடரில் கலந்துகொள்வதற்கான தகுதியை பெறும். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இறுதிப் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்சானலில் கண்டுகளிக்கலாம். சாம்பியன்பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் பரிசுத் தொகையாக ரூ.40 லட்சம் வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பெறும் அணி ரூ.30 லட்சம் பெறும்.