Last Updated : 02 Feb, 2018 09:22 AM

 

Published : 02 Feb 2018 09:22 AM
Last Updated : 02 Feb 2018 09:22 AM

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுக்கு ரூ.258 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.2196.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.258.20 கோடி கூடுதலாகும்.

கடந்த ஆண்டு விளையாட்டுத்துறைக்கு ரூ.1938.16 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.258.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.495.73 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை ரூ.429.56 கோடி மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறையைவிட ரூ.66.17 கோடி குறைவாகும்.

அதேவேளையில் கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்துக்கான நிதி ரூ.350 கோடியில் இருந்து ரூ.520.09 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இது 23.67 சதவீதமாகும். மேலும் விளையாட்டு மேம்பாட்டு தேசிய திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1047.19 கோடியில் இருந்து ரூ.1262.79 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் விளையாட்டு மேம்பாட்டுக்கான தொகை ரூ.75 கோடியில் இருந்து ரூ.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்கும் வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அதேவேளையில் பல்வேறு மாநில விளையாட்டு சங்கங்களுக்கான நிதி சுமார் ரூ.40 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த சங்கங்ளுக்கான ஒட்டுமொத்த நிதியாக ரூ.302.18 கோடி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தொகை ரூ.342 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரூ.41.82 கோடி அதிகமாகும்.

தேசிய விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதி ரூ.2 கோடியாகவும், ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1 கோடியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான நிதி ரூ.18.13 கோடியில் இருந்து ரூ.23 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுக்கான நிதி ரூ.10 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x