Published : 08 Feb 2018 07:32 AM
Last Updated : 08 Feb 2018 07:32 AM

ஹீரோ ஐ லீக் 2017 கால்பந்து தொடர்: சென்னை சிட்டி- மோகன் பகான் ஆட்டம் டிரா

ஹீரோ ஐ லீக் 2017 கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணி - கொல்கத்தா மோகன் பகான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி சார்பில் செர்பியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர், கொரியாவைச் சேர்ந்த கிம் ஆகியோர் புதிதாக களம் இறக்கப்பட்டிருந்தனர். முதல்முறையாக சென்னை சிட்டி அணி 5 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியது. ஏற்கெனவே கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில், மோகன் பகான் அணியை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றிருந்ததாலும், உள்ளூர் மைதானம் என்பதாலும் சென்னை சிட்டி அணியினர் உற்சாகமாக விளையாடினர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் போட வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் இரு தரப்பிலும் வலுவான கோல் கீப்பர்கள் இருந்ததால் கோல் விழவில்லை.

47-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பு நூலிழையில் தவறியது. 68-வது நிமிடத்தில் மோகன் பகான் அணி வீரர் கோல் போட முயன்றார். இதைத் தடுக்க முயன்ற சென்னை சிட்டி அணியின் கோல் கீப்பர் யூரோஸுக்கு அடிபட்டது. காயமடைந்த அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறியதால், அவருக்குப் பதிலாக கபீர், கோல் கீப்பராக களமிறங்கினார். தொடர்ந்து இரு அணிகளும் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டன. அப்போது மோகன் பகான் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும் இதை அந்த அணியின் வீரர் அக்ரம் மொக்ராபி கோலாக மாற்றத் தவறினார்.

83-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணியைச் சேர்ந்த எட்வின் சிட்னிக்கு நடுவர் ஆகாஷ் ஜாக்சன் ரூத், ரெட் கார்டு காண்பித்தார். முதல் முறையிலேயே ரெட் கார்டு காட்டப்பட்டதால் சென்னை அணி வீரர்கள் நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் எட்வின் சிட்னி மைதானத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து 10 வீரர்களுடன் சென்னை அணி விளையாடியது. முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

சென்னை அணிக்கு இது 6-வது டிராவாக அமைந்தது. 14 ஆட்டங்களில் விளையாடிய உள்ள சென்னை அணி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்தது. மோகன் பகான் அணி 21 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிகிறது.

ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட சென்னை சிட்டி அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியத்துக்கு, கோவை மாநகராட்சி தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் ஆட்ட நாயகன் விருதை வழங்கினார். கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 11-ம் தேதி மதியம் 2 மணியளவில் சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியும், ஷில்லாங் லஜோங் அணியும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x