

உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில் அசத்தல் ஆல்ரவுண்டராக அறியப்படுபவர் ரமன்தீப் சிங். லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர். பஞ்சாப் அணிக்காக ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்திறனை வெளிப்படுத்தும் வீரர். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: ஐபிஎல் அரங்கில் 2012 மற்றும் 2014 என இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது கொல்கத்தா அணி. இரண்டு முறையும் கவுதம் கம்பீர் தலைமையிலான அணி பட்டம் வென்றிருந்தது. அது தவிர நான்கு முறை பிளே ஆஃப் சுற்றுக்கும், ஒரு முறை இரண்டாம் இடமும் அந்த அணி பிடித்துள்ளது. டிசம்பரில் நடந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை கோடிகளில் வாங்கி இருந்தது. இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனை காயம் காரணமாக மிஸ் செய்த அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், இந்த சீசனில் விளையாடுகிறார். தனது ஆட்டத்திறனை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ், பிலிப் சால்ட், நிதிஷ் ராணா, ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் உள்ளனர்.
வெங்கடேஷ் ஐயர், ரஸல், ரமன்தீப் சிங் போன்ற ஆல்ரவுண்டர்களும் அணியில் உள்ளனர். பந்து வீச்சில் ஸ்டார்க், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, முஜீப் ரஹ்மான், சுயாஷ் சர்மா, துஷ்மந்த சமீரா, சக்காரியா போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ரமன்தீப் சிங்: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதற்கு முன்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். பஞ்சாப் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 26 வயதான அவர் லோயர் மிடில் ஆர்டரில் அதிரடி பாணியில் ஆடும் திறன் கொண்ட பேட்ஸ்மேன். வேகப்பந்து வீசக் கூடியவர். அவரை ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. கடந்த சீசனில் கேகேஆர் அணியில் ஆடிய ஷர்துல் தாக்குருக்கு சரியான மாற்று வீரர் என சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளூர் அளவிலான ஷெர்-இ-பஞ்சாப் டி20 கிரிக்கெட் தொடரில் 11 இன்னிங்ஸ் ஆடி 418 ரன்கள் எடுத்தார். அந்த தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 172.73. சராசரியாக ஒவ்வொரு 4.8 பந்துக்கும் பந்தினை பவுண்டரி லைனுக்கு வெளியே விரட்டி இருந்தார். 13 விக்கெட்களையும் அதில் கைப்பற்றி இருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 222. அந்த தொடரில் ஃபினிஷர் பணியை கவனித்தார். கடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 50 பந்துகளில் 80 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணியில் ரஸல் மற்றும் ரிங்கு சிங் போன்ற தரமான ஃபினிஷர்கள் உள்ள காரணத்தால் அவர்களுக்கு அடுத்தே இவர் பேட் செய்ய வாய்ப்புள்ளது.
“இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக எனது சிறப்பானா ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். அதன் மூலம் இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்ற எனது கனவை நிஜமாக்க விரும்புகிறேன்.
டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பவுலிங் திறன் மூலம் ரஸல் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். கடினமான ஓவர்களை வீசி அணிக்கு தேவையான வெற்றியை பெற்றுத் தருவார். அது போல நானும் கொல்கத்தா அணிக்காக ஆட்டத்தை வென்று கொடுக்க விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். அபார செயல்திறனை அவர் வெளிப்படுத்தினால் அது கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கும்.