Published : 07 Feb 2018 08:31 AM
Last Updated : 07 Feb 2018 08:31 AM

கேப்டவுனில் இன்று 3-வது ஒருநாள் போட்டி: தாக்குப்பிடிக்குமா தென் ஆப்பிரிக்கா?- சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. காயம் காரணமான முன்னணி வீரர்களை தென் ஆப்பிரிக்க அணி இழந்துள்ள நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 3-0 என முன்னிலை பெற்று சாதனை படைக்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், செஞ்சுரியனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிகளை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்க அணியை மீண்டும் சந்திக்கிறது இந்திய அணி. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி அந்த அணிக்கு எதிராக இதற்கு முன்னர் இருதரப்பு ஒருநாள் போட்டி தொடர்களில் 3 ஆட்டங்கள் வென்றது கிடையாது.

1992-93 மற்றும் 2010-11ம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் அதிகபட்சமாக இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதில் 2010-11ம் ஆண்டு தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது, ஆனால் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா 3-2 என வென்றது. 1992-93ம் ஆண்டு தொடரை இந்திய அணி 5-2 என இழந்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான இருதரப்பு தொடரில் முதன்முறையாக 3 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்து சாதனை படைக்கும். மேலும் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றுவதற்கான வழிகளில் முன்னேறிச் செல்லவும் முடியும்.

இதற்கான திறன்கள் இந்திய அணியிடம் இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் இம்முறை வரலாறு திருத்தி எழுதப்படக்கூடும் என கருதப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தென் ஆப்பிரிக்க அணி காயம் காரணமாக முன்னணி வீரர்களை இழந்து கடும் அழுத்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி வில்லியர்ஸ் விலகினார். அதேவேளையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த நிலையில் கேப்டன் டு பிளெஸ்ஸிஸூம் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார். அந்த அணியில் வீரர்கள் காயம் அடையும் பட்டியலில் வளர்ந்த நிலையிலேயே உள்ளது.

3-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக விக்கெட் கீப்பரும் தொடக்க பேட்ஸ்மேனுமான குயிண்டன் டி காக் விலகி உள்ளார். மணிக்கட்டு காயத்தால் அவர் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி காக்குக்கு மாற்று வீரராக இதுவரை யாரும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஏற்கெனவே புது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் அணியில் உள்ளார். உள்ளூர் அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஹென்ரிச் கிளாசென், இன்றைய ஆட்டத்தில் ஆம்லாவுடன் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும்.

டி காக், இந்தியாவுக்கு எதிரான 8 இன்னிங்ஸ்களில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள்), ஒரு முறை கூட 50 ரன்களை கடக்கவில்லை. 2-வது ஒருநாள் போட்டிக்கு முன்னதாகவே ஹென்ரிச் கிளாசென் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். ரிஸ்ட் ஸ்பின்னர்களான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரது மிரட்டல் பந்து வீச்சை சமாளிக்கும் விதமாக ஹென்ரிச் கிளாசனை அணிக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில்தான் டி காக் காயம் காரணமாக விலகி உள்ளார். ஆம்லாவுடன் இணைந்து ஹென்ரிச் கிளாசென் விரைவான தொடக்கம் கொடுப்பார் என தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

டி காக், ஆம்லா ஜோடி டர்பனில் முதல் விக்கெட்டுக்கு 30 ரன்களும், செஞ்சுரியனில் 39 ரன்களும் சேர்த்திருந்தது. டு பிளெஸ்ஸிஸ் முதல் ஒருநாள் போட்டியில் தாக்குப்பிடித்து விளையாடி சதம் அடித்த நிலையில் மற்ற வீரர்களிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படவில்லை. ரிஸ்ட் ஸ்பின் கூட்டணியான யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவிடம் தளர்வான முறையில் விக்கெட்களை தாரை வார்த்திருந்தனர். தனது 3-வது ஆட்டத்திலேயே கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் வகையில் பதவி உயர் பெற்ற இளம் வீரரான எய்டன் மார்க்ரம், அனைவரது கவனத்தையும் ஈர்க்கத் தவறினார். முதல் ஆட்டத்தில் 21 பந்துகளுக்கு 9 ரன்கள் சேர்த்த அவர், 2-வது ஆட்டத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்படமால் 11 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஷார்ட் பிட்ச் பந்தை தூக்கி அடித்து எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார்.

பார்மை இழந்து தவிக்கும் டேவிட் மில்லர், ஜேபி டுமினி மற்றும் கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக பங்கேற்ற கயா ஸோண்டோ ஆகியோரில் ஒருவர் இன்றைய ஆட்டத்தில் நீக்கப்படக்கூடும். ஸோண்டோ, செஞ்சுரியன் ஆட்டத்தில் அழுத்தமான சூழ்நிலையில் தேவையில்லாமல் அபாயகரமான ஷாட்களை மேற்கொண்டார். இதனால் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக அனுபவ வீரரான பெர்ஹான் பெகார்தின் விளையாடும் லெவனில் சேர்க்கப்படக்கூடும். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் வகையிலான அணிச்சேர்க்கையுடன் களமிறங்க தென் ஆப்பிரிக்க அணி ஆயத்தமாகும் என்றே கருதப்படுகிறது.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாற்றம் கண்டிருந்த நிலையில், 2-வது ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் ஆட்டத்தை சந்திக்காமல் மாறாக இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆட்டத்தை அணுகியிருந்தது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கான எதிர் பலனையும் அந்த அணி அனுபவித்தது. இதுதொடர்பாகவும் அந்த அணி ஆலோசிக்கக்கூடும்.

இந்திய அணி டெஸ்ட் தொடரில் முற்பகுதியில் வெளிப்படுத்திய திறனுக்கு எதிர்மாறாக தற்போது ஒருநாள் போட்டித் தொடரில் அதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சரியான நேரத்தில் இந்திய அணி, அணிச்சேர்க்கையை திறம்பட அமைத்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். வெற்றி கூட்டணியை மாற்றாமல் இந்திய அணி மீண்டும் ஒரு முறை அதே அணியுடன் களமிறங்கும் என்றே கருதப்படுகிறது. இன்றைய ஆட்டம் நடைபெறும் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 1992-ம் ஆண்டுக்கு பிறகு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் தலா 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் 3 ஆட்டத்தில் விளையாடி உள்ள இந்திய அணி 2 தோல்வி, ஒரு வெற்றியை பெற்றுள்ளது. செஞ்சுரியன் ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் இந்திய அணி, ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் இடைவெளியை அதிகரித்துக் கொள்ளலாம். அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்திய அணி மீண்டும் 2-வது இடத்துக்கு தள்ளப்படும். இரு ஆட்டங்களிலும் 13 விக்கெட்களை வேட்டையாடி உள்ள யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி மீண்டும் ஒரு முறை தென் ஆப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுக்க தயாராக உள்ளனர்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ்பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஜேபி டுமினி, இம்ரன் தகிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், லுங்கி நிகிடி, பெலுக்வயோ, ரபாடா, தபராஸ் ஷம்சி, கயா ஸோண்டோ, பர்ஹான் பெகார்தின், ஹென்ரிச் கிளாசென். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x