Last Updated : 16 Mar, 2024 08:46 AM

 

Published : 16 Mar 2024 08:46 AM
Last Updated : 16 Mar 2024 08:46 AM

‘சாதிக்க’ காத்திருக்கும் கோலி... ஆர்சிபி அணி எப்படி? - ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

ஆர்சிபி அணி | கோப்புப்படம்

வழக்கம் போல் இம்முறையும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை அதிகம் உள்ளடக்கிய அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் துடிப்பாக செயல்படக்கூடிய 4 அணிகளில் ஒன்றாக திகழும் ஆர்சிபி அணியானது 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை கைகளில் ஏந்தியது இல்லை.

ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணியின் வாசகம் ‘இம்முறை கோப்பை நமதே’ என்பதுதான். இம்முறையும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் களமிறங்குகிறது. இந்த சீசனில் ஆர்சிபி உறுதியான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. தொடக்க வீரர்களாக டு பிளெஸ்ஸிஸ், விராட் கோலி அசத்த காத்திருக்கின்றனர்.

இதில் விராட் கோலி டி20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு 6 ரன்களே தேவையாக இருக்கிறது. இதை அவர், தனது முதல் ஆட்டத்திலேயே எடுக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதுவரை விராட் கோலி டி 20 போட்டிகளில் 11,994 ரன்கள் குவித்துள்ளார். நடுவரிசை பேட்டிங்கில் ரஜத் பட்டிதார், ஆல்ரவுண்டர்களான ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல் வலுசேர்க்கக்கூடும். இதில் கேமரூன் கிரீன் இந்த சீசனுக்காக ரூ.17.50 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டிருந்தார்.

டாப் ஆர்டர், நடுவரிசை வலுவாக உள்ள நிலையில் பின்வரிசை பேட்டிங் பலவீனமாக காணப்படுகிறது. பினிஷராக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் கடந்த சீசனில் ஏமாற்றம் அளித்தார்.

எனினும் இந்த சீசனுடன் அவர், ஓய்வுபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், டாம் கரன் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், விஜயகுமார் வைஷாக், ஆகாஷ் தீப் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும். அதேவேளையில் ஆர்சிபி சாதாரண சுழற்பந்து வீச்சு தாக்குதலையே கொண்டுள்ளது, கரண் சர்மா மட்டுமே அடையாளம் காணக்கூடிய சுழற்பந்து வீச்சாளராக உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x