ரஞ்சி கோப்பை | 42-வது முறையாக மும்பை சாம்பியன்
மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தபோட்டியில் மும்பை அணி முதல்இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
538 ரன்கள் இலக்குடன் பேட் செய்த விதர்பா அணி 4-வது நாள் ஆட்டத்தில் 92 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. அதர்வா டைடே 32, துருவ் ஷோரே 28, அமன்மோகடே 32, யாஷ் ரத்தோட் 7, கருண் நாயன் 74 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் அக் ஷய் வத்கர் 56, ஹர்ஷ் துபே 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வெற்றிக்கு மேற்கொண்டு 290 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி 134.3 ஓவர்களில் 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அக் ஷய் வத்கர் 102 ரன்களும், ஹர்ஷ் துபே 65 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து ஆதித்யா சர்வதே 3, யாஷ் தாக்குர் 6, உமேஷ் யாதவ் 6 ரன்களில் நடையை கட்டினர்.
மும்பை அணி தரப்பில் தனுஷ் கோட்டியன் 4 விக்கெட்களையும் முஷீர் கான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 42-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
