

மும்பை: வரும் 22-ம் தேதி 17-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்துகிறார் ஹர்திக் பாண்டியா. அந்த அணிக்காக கடந்த சீசன்களில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா, பேட்ஸ்மேனாக அந்த அணியில் விளையாட உள்ளார். இந்நிலையில், அவரை மனதார புகழ்ந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
“ரோகித் சர்மா, தன்னலமற்றவர். தனது தனிப்பட்ட நோக்கத்தை காட்டிலும் அணியை மேலானதாக எண்ணி விளையாடுகின்ற வீரர். இந்திய அணிக்கு அவரது சேவை கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் தேவை. அவரது அனுபவம் அணியை முன்னின்று வழிநடத்தி செல்லும். அதே நேரத்தில் ரோகித் இந்த சீசனில் மும்பை அணிக்கு பேட்ஸ்மேனாக தேவைப்படுகிறார். அவர் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டுமென அந்த அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது” என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2011 முதல் ரோகித் விளையாடி வருகிறார். இதுவரை அந்த அணிக்காக 198 போட்டிகளில் விளையாடி 5,041 ரன்கள் குவித்துள்ளார். 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து முறை மும்பை பட்டம் வென்ற அணியை வழிநடத்தியது அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் உடன் இணைந்து ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.