Published : 14 Mar 2024 12:19 AM
Last Updated : 14 Mar 2024 12:19 AM

‘நான் களத்துக்கு திரும்புவது அறிமுக வீரரை போன்ற உணர்வை தருகிறது’ - ரிஷப் பந்த்

விசாகப்பட்டினம்: சுமார் 15 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட்டில் களத்துக்கு திரும்பியுள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இந்நிலையில், இந்த நேரத்தில் தானொரு அறிமுக வீரரை போல உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 டிசம்பர் மாத இறுதியில் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதிலிருந்து மெல்ல மீண்டு வந்த அவர், சமயங்களில் அது சார்ந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். இந்நிலையில், அவர் முழு உடற்தகுதியை அடைந்துவிட்டதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அந்த வகையில் அவர் 17-வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். தற்போது அணியுடன் அவர் இணைந்துள்ளார்.

“நான் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளேன். அதே நேரத்தில் லேசான பதட்டமும் என்னுள் உள்ளது. நான் களத்துக்கு திரும்புவது அறிமுக வீரரை போன்ற உணர்வை தருகிறது. இந்த நேரத்தில் எனது நலன் விரும்பிகள், நண்பர்கள், ரசிகர்கள், பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஊழியர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்களது ஊக்கமும், ஆதரவும்தான் எனக்கு பலம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x