

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், விதர்பா அணி 105 ரன்களும் எடுத்தன. 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. முஷீர் கான் 51, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 58 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை மும்பை அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக பேட் செய்து வந்த அஜிங்க்ய ரஹானே 143 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர்அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் நிதானமாக பேட் செய்த முஷீர் கான் 225 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார்.
மட்டையை சுழற்றிய ஸ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் விளாசிய நிலையில் ஆதித்யா தாக்கரே பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் தாமோர் 5 ரன்னில் யாஷ் தாக்குர் பந்தில் போல்டானார். பொறுமையாக விளையாடி வந்த முஷீர் கான் 326 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவர்களை தொடர்ந்து ஷர்துல் தாக்குர் 0, தனுஷ் கோட்டியன் 13, துஷார் தேஷ்பாண்டே 2, தவால் குல்கர்னி 0 ரன்களில் நடையை கட்டினர்.
முடிவில் மும்பை அணி 130.2 ஓவர்களில் 418 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷம்ஸ் முலானி 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். விதர்பா அணி தரப்பில்ஹர்ஷ் துபே 5, யாஷ் தாக்குர் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 538 ரன்கள் இலக்குடன் பேட் செய்த விதர்பா அணியானது 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்தது. அதர்வா டைடே3, துருவ் ஷோரே 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளது.