அஸ்வின், வருண் ஆரோன் தலா 2 விக்கெட்டுகள்: ஓரளவுக்கு உயிர்பெற்ற இந்தியா

அஸ்வின், வருண் ஆரோன் தலா 2 விக்கெட்டுகள்: ஓரளவுக்கு உயிர்பெற்ற இந்தியா
Updated on
1 min read

ஓவல் டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது.

அஸ்வின், வருண் ஆரோன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 11 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இன்று 62/0 என்று இறங்கிய இங்கிலாந்து அணி வந்தவுடன் வருண் ஆரோனின் யார்க்கர் போன்ற பந்தில் ராப்சன் விக்கெட்டைப் பறிகொடுத்தது. ராப்சன் பவுல்டு ஆனார்.

அதன் பிறகு கேரி பாலன்ஸ், குக் இணைந்து மிகவும் சுதந்திரமாக ரன்களை எடுத்தனர். பந்து வீச்சில் தாக்கம் ஒன்றுமில்லை. கேப்டன் தோனி ஒரு நேரத்தில் பாயிண்ட் இல்லாமல் கள அமைப்பு மேற்கொண்டார்.

முரளி விஜய் விட்டதும் பிடித்ததும்...

அலிஸ்டர் குக் 64 ரன்களில் இருந்த போது வருண் ஆரோன் வீசிய பந்தை ஆட முயன்ற குக்கின் மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் முரளி விஜய் கையில் கேட்ச் பிடிக்கும் உயரத்தில் சென்றது. ஆனால் முரளி விஜய் அதனை கோட்டை விட்டார். இந்திய அணியினரின் தலை தொங்கியது.

ஆனால் அதன் பிறகு 79 ரன்கள் வரை வந்தார் குக், இந்த முறை வருண் ஆரோன் பந்தை அவர் ஆட முயல எட்ஜ் ஆகி விஜய்யிடம் சென்றது. இந்த முறை பிடித்தார். குக் ஆட்டமிழந்தார்.

பேலன்ஸ், குக் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 125 ரன்கள் சேர்த்தனர்.

அதன் பிறகு 64 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த கேரி பாலன்ஸ், அஸ்வின் வீசிய சாதாரண லெந்த் பந்தை ஆட அது நேராக சிலிபாயிண்ட் திசையில் புஜாராவிடம் கேட்ச் ஆனது.

சிறிது நேரத்தில் இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மென் இயன் பெல் 7 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் இன்ஸ்விங்கர் பிட்ச் ஆகி சற்றே நேராக அதனை தொட்டார் பெல், தோனியிடம் கேட்ச் ஆனது.

மொயீன் அலி 14 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்தை இரட்டை மனநிலையில் ஆடி பந்து மட்டையின் அடி விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.

வருண் ஆரோன் நல்ல வேகத்தில் வீசினார். ஆனால் அதிர்ஷ்டமில்லை. கள அமைப்பும் அவருக்கு உதவிகரமாக அமையவில்லை.

இங்கிலாந்து தற்போது இந்தியாவைக் காட்டிலும் சரியாக 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்னொரு 50 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டி, அதன் பிறகு ஒரு 300 ரன்களையாவது எடுத்து இங்கிலாந்தை 4வது இன்னிங்சில் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கெல்லாம் தீராத வேட்கை வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in