

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற 2-வது சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் இரு மாறுதல்களை செய்திருந்தார் பயிற்சியாளர் கோவர்மன்ஸ். சஸ்பென்ட் செய்யப்பட்ட ராபின் சிங் மற்றும் பிரணாய் ஹால்டர் ஆகியோருக்குப் பதிலாக ஹாவ்கிப், மிலன் சிங் ஆகியோரை களமிறக்கினார்.
ஆட்டத்தின் முதல் 14 நிமிடங்களில் இரு அணிகளுக்கும் தலா ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தன. இந்திய தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி அடித்த பந்தை பாகிஸ்தானின் முஸாமில் ஹுசைன் தகர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் கலீமுல்லா அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே பறந்தது.
இதன்பிறகு 37-வது நிமிடத்தில் இந்தியாவின் மற்றொரு கோல் வாய்ப்பை பாகிஸ்தானின் சதாம் உசேன் தகர்க்க, 39-வது நிமிடத்தில் ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு முதல் கோலை பெற்றுத்தந்தார் கேப்டன் கலீமுல்லா. இந்தியாவின் லால்ரின்டிகா ரால்டே செய்த தவறால் பாகிஸ்தானுக்கு ப்ரீ கிக் கிடைத்தது.
முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த பாகிஸ்தான், 2-வது பாதி ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து வெற்றி கண்டது. இந்த கோலை சதாம் உசேன் அடித்தார்.
முதல் ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விரு அணிகளுக்கும் இடையே ஹாக்கித் தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.