தரம்சாலா டெஸ்ட் | அறிமுக போட்டியில் தேவ்தத் படிக்கல் அரைசதம் - இந்தியா 255 ரன்கள் முன்னிலை

தரம்சாலா டெஸ்ட் | அறிமுக போட்டியில் தேவ்தத் படிக்கல் அரைசதம் - இந்தியா 255 ரன்கள் முன்னிலை
Updated on
2 min read

தரம்சாலா: தரம்சாலா டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.

தரம்சாலாவில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களை மட்டும் சந்தித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸாக் கிராவ்லி 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.

தனது 4-வது அரை சதத்தை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசிய நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். தனது 18-வது அரை சதத்தை விளாசிய ரோகித் சர்மா 83 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், ஷுப்மன் கில் 39 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் சேர்த்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி ரன்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டிய அதேவேளையில் விக்கெட் விழாமல் இருவரும் நிதானம் காட்டினார். விரைவாக அரைசதம் கடந்த ஷுப்மன் கில், மறுபக்கம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த ரோகித்தை முந்தும் முனைப்பில் இருந்தார்.

எனினும், அவருக்கு முன்னதாக 154 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா 13 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உடன் நடப்பு தொடரில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். சில நொடிகளில் ஷுப்மன் கில்லும் சதம் பதிவு செய்து அசத்தினார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சிறிதுநேரத்தில் 103 ரன்களில் ரோகித் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார் ரோகித். அடுத்த ஓவரிலேயே ஷுப்மன் கில்லும் விக்கெட்டானார். ஷுப்மன் கில் 110 ரன்கள் எடுத்தார்.

இதன்பின், களமிறங்கிய தேவ்தத் படிக்கல் - சர்ப்ராஸ் கான் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இக்கூட்டணி 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. அரைசதம் கடந்த நிலையில் 56 ரன்கள் எடுத்திருந்த சர்ப்ராஸ் கானை அவுட் ஆக்கி ஷோயிப் பஷிர் கூட்டணியை பிரித்தார்.

மறுப்பக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கலையும் ஷோயிப் பஷிர் போல்டாக்கினார். படிக்கல் 65 ரன்கள் சேர்த்தார். படிக்கல்லின் விக்கெட்டுக்கு பின் துருவ் ஜூரெல் மற்றும் ஜடேஜா தலா 15 ரன்கள், அஸ்வின் பூஜ்ஜியம் என அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தது இந்தியா.

இதன்பின் இணைந்த குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து ரன்களை சேர்த்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது.

இதன்மூலம் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. குல்தீப் யாதவ் 27 ரன்கள், பும்ரா 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷிர் 4 விக்கெட், டாம் ஹார்ட்லி 2 விக்கெட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆண்டர்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in