

நியூஸிலாந்தின் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மென் ஆக்ரோஷமாக அடித்த ஷாட் ஒன்று பவுலர் தலையில் பட்டு பிறகு சிக்ஸருக்குச் சென்ற வினோதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆக்லாந்து பேட்ஸ்மென் ஜீத் ராவல், ஆண்ட்ரூ எல்லிஸ் என்ற பவுலரின் பந்தை நேராக ஆக்ரோஷமாக அடிக்க பந்து பவுலர் தலையில் பட்ட பிறகும் சிக்சருக்குப் பறந்தது.
கேண்டர்பரி அணியைச் சேர்ந்தவர் பவுலர்/கேப்டன் எல்லிஸ். பந்து தலையில் பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார்.
ஆனால் ஒன்றும் ஆபத்தில்லை என்றவுடன் ஓவரையும் முடித்து பிறகு பேட்டிங்கும் செய்தார்.
ஃபோர்ட் டிராபிக்கான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்து இன்னிங்ஸில் 19வது ஓவரில் இந்த வினோதம் நிகழ்ந்தது. கேப்டன் எல்லிஸ் பந்து வீச வந்தார்.
அப்போது ஜீத் ராவல் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்தார், இதில் 2வது சிக்ஸர் எல்லிஸின் தலையில் பட்டு சற்றும் எதிர்பாராத விதமாக சிக்சருக்குப் பறந்தது. முதலில் நடுவர் நான்கு ரன்கள் என்று செய்கை செய்தார், பிறகு தன் முடிவை சிக்ஸ் என மாற்றினார்.
தலையில் அடிபட்டது குறித்து பரிசோதனை செய்வதற்காகச் சென்ற எல்லிஸ் பிறகு ஆபத்து ஒன்றுமில்லை என்று உறுதியானவுடன் 6 ஓவர்களை வீசினார். இந்த ஸ்பெல்லில் அவர் 7 ஓவர்கள் வீசி 52 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் ஜீத் ராவல் விக்கெட்டும் அடங்கும்.
ஜீத் ராவல் இது குறித்துக் கூறும்போது, “பந்து அவர் தலையில் பட்டவுடன் அவருக்கு என்ன ஆனதோ என்ற கவலையே மேலிட்டது,
ஆனால் சரியான அடிபட்டும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றவுடன் மனம் நிம்மதி அடைந்தது. இப்படியாவது நிச்சயம் நல்ல
உணர்வை எனக்கு ஏற்படுத்தவில்லை” என்றார்.
ஜீத் ராவல் 153 பந்துகளில் 149 ரன்களை 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் விளாசினார். ஆக்லாந்து 304/6. இலக்கை விரட்டிய கேண்டர்பரி 37.2 ஓவர்களில் 197 ரன்களுக்குச் சுருண்டது.