

கராச்சி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி குத்துச்சண்டை தகுதி சுற்றில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகள் இத்தாலி சென்றுள்ளனர். இவர்களில் ஜோஹைப் ரஷீத்தும் ஒருவர். இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். வளர்ந்து வரும் திறமையான வீரர்களில் ஒருவராக ஜோஹைப் ரஷீத் அறியப்பட்டிருந்தார்.
இத்தாலியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அனைவரும் தங்கி இருந்தனர். அப்போது பாகிஸ்தான் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த வீராங்கனை லாரா இக்ரம் பயிற்சிக்காக அறையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அறையின் சாவியை பெற்ற ஜோஹைப் ரஷீத், உள்ளே சென்று லாரா இக்ரமின் பையில் இருந்த வெளிநாட்டு கரன்சியை திருடிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் ஜோஹைப் ரஷீத் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக பாகிஸ்தான் குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இத்தாலியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.