

அஜ்மான்: நடப்பு யுஏஇ புரோ லீக் கால்பந்து தொடரில் எமிரேட்ஸ் கால்பந்து கிளப் அணிக்காக அஜ்மான் அணிக்கு எதிரான போட்டியில் களம் கண்டார் ஆன்ட்ரஸ் இனியஸ்டா. இது இவர் பங்கேற்று விளையாடிய 1000-மாவது கிளப் போட்டியாக அமைந்தது. இது அவரது மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது.
39 வயதான இனியஸ்டா, சிறந்த மிட்-ஃபீல்டர். சர்வதேச கால்பந்து அரங்கில் 2006 முதல் 2018 வரையில் ஸ்பெயின் அணிக்காக விளையாடினார். 2010-ல் உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியில் அங்கம் வகித்தவர். முக்கியமாக நெதர்லாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் இவர் பதிவு செய்த கோல் மூலம் ஸ்பெயின், உலக சாம்பியன் ஆனது. அந்த தருணம் என்றென்றும் கால்பந்தாட்ட ரசிகர்களால் மறக்க முடியாதது. 118-வது நிமிடத்தில் அணிக்கு தேவையான கோலை பதிவு செய்தார். 1-0 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. 2008 மற்றும் 2010-ல் யூரோ சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியிலும் இனியஸ்டா அங்கம் வகித்தார். ‘மெஜிஷியன்’ என இவர் அழைக்கப்படுவது உண்டு.
கிளப் போட்டிகள்: தொழில்முறை ரீதியாக சீனியர் அளவிலான கிளப் அணிகளிலும் இனியஸ்டா முக்கியப் பங்காற்றி வருகிறார். தற்போது எமிரேட்ஸ் கிளப் அணியில் விளையாடி வருகிறார். பார்சிலோனா பி, பார்சிலோனா, Vissel Kobe, Seleccion Espanola அணிக்காக அவர் விளையாடி உள்ளார். பார்சிலோனா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். தனது 1,000-மாவது போட்டியில் அஜ்மான் அணிக்கு எதிராக சுமார் 80 நிமிடங்கள் களத்தில் விளையாடி இருந்தார்.