Published : 02 Mar 2024 05:34 PM
Last Updated : 02 Mar 2024 05:34 PM

‘நா.முத்துக்குமார் இரவுகள், தி.மலை தியானம்...’ - மனம் திறந்த சாய் கிஷோர் பகிர்வுகள்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் சாய் கிஷோர் முன்னணி அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு தாக்கம் ஏற்படுத்தும் விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்த கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அல்லாத விஷயங்கள் பற்றியும் மனம் திறந்துள்ளார்.

அந்தப் பேட்டியில் தன்னைத்தானே நகைச்சுவையாக ‘பைத்தியக்காரன்’ என்று அழைத்துக் கொள்வதையும் குறிப்பிட்டு, “நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என்னைக் கணிக்க முடியாது, என்னைப் புரிந்து கொள்வது கடினம். மனதில் பட்டதைச் செய்வேன். அதற்குப் பெரிய காரணமெல்லாம் கிடையாது” என்று தன்னை தான் ஏன் பைத்தியக்காரன் என கூறிக்கொள்வதற்கான காரணத்தைக் கூறியுள்ளார் சாய் கிஷோர்.

2021-ல் இந்திய வெள்ளைப்பந்து அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்ற சாய் கிஷோர் கோவிட் காரணமாக பாதுகாப்பு பயோ-பபுள் வளையத்தில் செலவிட்டதைப் பற்றி கூறினார். ஆனால் வீட்டுக்குத் திரும்பாமல் வடகிழக்கு மாநிலங்களில் அந்த உள்ளூர் பண்பாட்டை அறிய பயணம் மேற்கொண்டார். சாய் தியானம் செய்யும் பழக்கம் உடையவர், ஆதலால் அசாமுக்கும் நாகாலாந்துக்கும் இடையே இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். இது ஒரு எக்சென்ட்ரிக் ஆன விஷயம்தானே.

திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கிரிவலம் மேற்கொள்ளும் பழக்கத்தைப் பற்றியும் சாய் கிஷோர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் அசாதாரண விஷயம் என்னவெனில் அங்கு இருக்கும் சாமியார்களுடன் அமர்ந்து மணிக்கணக்காக தியானம் செய்வாராம். வெறும் தரையில் தலைக்கு கைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்து படுப்பாராம் சாய் கிஷோர். அன்னதானமும் செய்திருக்கிறார்.

“திருவண்ணாமலையில் மிகவும் அமைதியும் நேர்மறை அதிர்வுகளும் உள்ளன. அப்படிப்பட்ட இடங்கள் எனக்கு பிடிக்கும், எப்படி எங்கள் ஓய்வறை பிடிக்குமோ அப்படி இதெல்லாம் இறைவன் அருள்” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் சாய் கிஷோர்.

தனக்குத் தூண்டுகோலாக இருப்பது மறைந்த கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளே என்கிறார். விடுதியில் அணியுடன் தங்கும் போதெல்லாம் இரவுப்பொழுதுகள், ‘நா.முத்துக்குமார் இரவுகள்’ ஆகவே இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். அவருடைய பாடல் வரிகள் அணிக்கே சில சமயங்களில் தூண்டுதலாக இருக்குமாம்.

“பாடலாசிரியர்களின் பாடல் வரிகள் எப்போதும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஆனால், வரிகளில்தான் அழகே உள்ளது. நடிகரையும் இசையமைப்பாளரையும் காட்சிகளையும் அனைவரும் ரசிப்பார்கள். ஆனால் பாடல் வரிகளையோ, பாடலாசிரியர்களையோ மக்கள் நினைவில் கொள்வதில்லை. வரிகள் இல்லாமல் இசையில் ஆன்மா இல்லை” என்று கூறும் சாய் கிஷோர் கித்தார் வாசிப்பவர்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை வாசிப்பது இவரது பொழுதுபோக்கு. தமிழ்நாடு அணியின் ஓய்வறை மூட் இப்படித்தான் என்று சாய் கிஷோர் அந்தப் பேட்டியில் மீண்டும் நா.முத்துக்குமார் வரிகளைத்தான் அசைபோட்டார். புதுப்பேட்டை படத்தில் வரும் ‘ஒரு நாளில்’ என்ற பாடலில் இடம்பெறும் “கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்.. எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர்த்தொடுப்போம்” என்று தமிழ்நாடு அணியின் ஓய்வறை உணர்வு இதுதான் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x