Published : 27 Feb 2018 08:23 AM
Last Updated : 27 Feb 2018 08:23 AM

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தால் இந்திய அணிக்கு ஆதாயம்: உலகக் கோப்பைக்கான அணி உருவாகிவிட்டதா?- 4, 5-வது இடத்தை பிடிக்க ரெய்னா உள்ளிட்ட 5 வீரர்கள் இடையே போட்டி நிலவக்கூடும்

விராட் கோலியின் தனித்தன்மை வாய்ந்த பேட்டிங், அனைத்து வடிவிலான ஆட்டங்களுக்கும் பொருந்தியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உலகக் கோப்பை தொடருக்கான ஒருங்கிணைந்த வீரர்கள் குழு தேடலுக்கான முன்வடிவை பெற்றுள்ளது என சில குறிப்பிடத்தக்க விஷயங்களுடன் சமீபத்திய தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

‘வானவில் நாடு’ என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 7 வார காலங்கள் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. பல வருடங்களுக்கு பிறகு துணைக்கண்டத்துக்கு வெளியில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் இரண்டை வென்று ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விராட் கோலி குழுவினர் உயிர்பிப்பு கொடுத்துள்ளனர். இந்த 7 வாரங்களும், தென் ஆப்பிரிக்க மண்ணில் கடும் சவால்களுக்கு இடையில்தான் இந்திய அணியின் பயணம் அமைந்தது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ‘பிழைகளுடன்’ விளையாடி 1-2 இழந்த போதிலும், குறுகிய வடிவிலான தொடர்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் உன்னதமாக வென்றெடுத்தது.

அதேவேளையில் நீண்ட வடிவிலான போட்டியில் இந்திய அணி போட்டி மனப்பான்மை இல்லாமல் விளையாடியது என்று யாரும் கூறிவிட முடியாது. மேலும் போதிய திறன் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் கிடையாது என்ற சித்தாந்தமும் தென் ஆப்பிரிக்க தொடரில் உடைத்தெறியப்பட்டுள்ளது.

முகமது ஷமி 15, ஜஸ்பிரித் பும்ரா 14, புவனேஷ்வர் குமார் 10, இஷாந்த் சர்மா 8 விக்கெட்கள் வேட்டையாடினார்கள். 3 டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணியின் 60 விக்கெட்களில் இவர்கள் மட்டும் 47 விக்கெட்களை சாய்த்துள்ளனர். பேட்டிங்குக்கு சாதகமான செஞ்சுரியனில் 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து தொடரை இழந்த போதிலும் கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தன்னம்பிக்கையை இழக்காமல் கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டெழுந்து ஒட்டுமொத்த வீரர்களையும் ஒருங்கிணைத்து வெற்றியை வசப்படுத்த உதவினர்.

குறுகிய வடிவிலான போட்டிகளில் அசத்தி வந்த ஜஸ்புரித் பும்ரா, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் வாயிலாக டெஸ்ட் பந்து வீச்சாளராகவும் உருமாற்றம் பெற்றுள்ளார். டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் பும்ரா தொடர்பான கேள்விக்கு விராட் கோலி பதிலளிக்கையில், “விளையாடும் லெவனில் பும்ரா சிறப்பாக பொருந்தக்கூடியவர். அவரை போன்ற சிலர்தான் தேவையான நேரத்தில் திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அவர் 40 முதல் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் போல் செயல்படுகிறார்” என தெரிவித்திருந்தார்.

பேட்டிங்கில் செய்த தவறுகள் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லமுடியாமல் போனதற்கான முதன்மை காரணியாக அமைந்தது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணியும் தங்களது சொந்த ஆடுகளங்களில் கூட பெரிய அளவில் ரன்களை குவித்துவிடவில்லை. விராட் கோலி ஒட்டுமொத்தமாக சேர்த்த 286 ரன்கள்தான் இந்தத் தொடரில் தனிப்பட்ட வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்கள். இது டி வில்லியர்ஸ் சேர்த்த ரன்களை விட 75 கூடுதலாகும். அவர், 211 ரன்கள் எடுத்திருந்தார்.

கேப்டன் பொறுப்பிலும் ஆக்ரோஷ மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாத விராட் கோலி, ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தகுந்தபடி விளையாடும் லெவனை மாற்றியமைப்பது இம்முறை நீண்ட வடிவிலான ஆட்டத்துக்கு முற்றிலும் உதவாமல் போனது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் அஜிங்க்ய ரஹானேவின் திறனைவிட ரோஹித் சர்மாவின் சமீபகால பார்மை அதீதமாக விராட் கோலி நம்பினார். ஆனால் இது அவருக்கு எதிர்மறையாகவே அமைந்தது. இந்த முடிவுக்காக விராட் கோலி, விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

ஒருநாள் போட்டித் தொடரிலும் ரோஹித் சர்மாவின் சோகம் தொடர்கதையானது. 6 ஆட்டத்தில் அவர் ஒரு சதத்துடன் 28.33 சராசரியுடன் 170 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஆனால் ‘கிங் கோலி’ 3 சதங்கள், ஒரு அரை சதத்துடன் 558 ரன்கள் வேட்டையாடினார். ஒருநாள் போட்டித் தொடரை வெல்ல காரணமாக அமைந்த அவரது பேட்டிங்கை, ரவிசாஸ்திரி வெகுவாக பாராட்டியிருந்தார். விராட் கோலியை வாழ்த்துவதற்கு புதிதாக வந்துள்ள ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் தான் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என தனக்கே உரிய சொல்லாடலால் சிலாகித்துக் கொண்டார் ரவி சாஸ்திரி.

குறுகிய வடிவிலான தொடர்களை இந்திய அணி வென்ற போதிலும், எதிர்மறை கருத்துகள் எழாமல் இல்லை. டி வில்லியர்ஸ், டு பிளெஸ்ஸிஸ் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத தென் ஆப்பிரிக்க அணி வலுவில்லாததுதான், இதனால் இந்திய அணியின் வெற்றி பெரிய அளவிலான மகிழ்ச்சிதரக்கூடியதாக அமையப்பெறவில்லை என்ற விமர்சனங்களும் தோன்றவே செய்தன. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தின் வழியாக இந்திய அணிக்கு பெரிய அளவிலோ அல்லது குறைந்த அளவிலோ ஆதாயம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உலகக் கோப்பை தொடருக்கான ஒருங்கிணைந்த அணியை உருவாக்குவதற்கு சரியான திட்டம் இந்திய அணிக்கு கிடைத்துள்ளதாகவே கருதப்படுகிறது. சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காத போதிலும் விக்கெட்கள் கைப்பற்றும் திறன் கொண்டவர்களாக குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல் உருவெடுத்துள்ளனர்.

ரிஸ்ட் ஸ்பின்னர்களான இவர்கள் இருவரும், ஒருநாள் போட்டித் தொடரில் 33 விக்கெட்களை வீழ்த்தி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினர். இவர்களுடன் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோரை உள்ளடக்கிய நிலையில் பந்து வீச்சு துறை முழுமை பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடர் வரை நிச்சயம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார். இதில் எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. தொடக்க வீரர்களாக ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஜோடியும், 3-வது இடத்தில் விராட் கோலியும் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டவையாகவே உள்ளது.

பேட்டிங்கில் மீதம் இருப்பது 4 மற்றும் 5-வது இடம் மட்டுமே. இந்த இரு இடத்தை பிடிக்க அஜிக்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சுரேஷ் ரெய்னா ஆகிய 5 வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவக்கூடும். நடு ஓவர்களில் அஜிங்க்ய ரஹானேவின் ஸ்டிரைக் ரேட் சிறப்பாக இல்லை என்ற போதிலும் ஆஸ்திரேலியாவில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 4-வது வீரராக களமிறங்கி உள்ளதால், அவரது பெயர் பரிசீலிக்கப்படக்கூடும்.

மணீஷ் பாண்டே தனக்கு கிடைக்கும் சிறிய அளவிலான வாய்ப்பிலும் திறனை நிரூபித்து வருகிறார். அதேவேளையில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கேதார் ஜாதவ், சுழற்பந்து வீச்சால் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் வீரராகவும் உள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் சிறந்த பங்களிப்பு செய்துள்ள ஸ்ரேயஸ் ஐயரும் கவனிக்கத்தக்க வீரராக உருவெடுத்துள்ளார். இவர்களுடன் சுரேஷ் ரெய்னாவும் மல்லுக்கட்ட உள்ளார். ஓராண்டுக்கு பிறகு டி 20 அணியில் இடம் பிடித்த ரெய்னா, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றி அனைவரது பார்வையையும் தன்னுடைய பக்கம் குவியச் செய்துள்ளார்.

ரவி சாஸ்திரி கூறும்போது, “உலகக் கோப்பை தொடருக்கு தயாராகுவற்கான முறை என்று பார்த்தால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் சிறப்பானதுதான். இந்தத் தொடரில் சில நல்ல பழக்கங்கங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்த அணி வரும் நாட்களில் கடினமான தொடர்களை எதிர்கொள்ள உள்ளனர். தென் ஆப்பிரிக்க தொடரில் அனைவரும் தங்களை தானே சிறப்பாக வழிநடத்திக் கொண்டதாகவே கருதுகிறேன்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x