உ.பி.யில் அங்கீகாரம் இல்லை: வெளியேறுவது குறித்து சிந்தித்து வருகிறேன் - ஜிது ராய் வேதனை

உ.பி.யில் அங்கீகாரம் இல்லை: வெளியேறுவது குறித்து சிந்தித்து வருகிறேன் - ஜிது ராய் வேதனை
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் எனது சாதனைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. அதனால் அங்கிருந்து வெளியேறுவது குறித்து சிந்தித்து வருகிறேன் என காமன்வெல்த் போட்டியில், போட்டி சாதனையோடு, தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராய் கூறியுள்ளார்.

தமிழகம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசை வாரி வழங்கி வரும் நிலையில், ஜிது ராய்க்கு எதுவும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 9 நாள்களில் 3 பதக்கங்களை வென்றேன். இப்போது காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறேன். ஆனாலும் எனது சாதனை வெளியில் தெரியவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக லக்னெளவில் வசித்து வரும் எனக்கு பெரிய அளவில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

2011-ல் ஜார்க்கண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பங்கேற்ற ஒரே துப்பாக்கி சுடுதல் வீரர் நான்தான். தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் உத்தரப் பிரதேசத்துக்காக 6 முறை பங்கேற்ற பிறகும் என்னை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என அங்கீகரிப்பது தொடர்பாக சந்தேகத்திலும், குழப்பத்திலும் உள்ளனர். 2006-ல் இருந்து லக்னெளவில் வசித்து வருகிறேன். ஏராளமான பதக்கங்களை வென்று இந்த மாநிலத்துக்கு பெருமை சேர்த்தபோதும் என்னை அங்கீகரிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.

இனி உத்தரப் பிரதேச அரசின் வெகுமதிகளை ஏற்க நான் மறுக்கலாம். வேறு மாநிலத்துக்கு இடம்பெயர்வது குறித்து சிந்தித்து வருகிறேன். உத்தரப் பிரதேச அரசு எனது சாதனையை அங்கீகரிக்க விரும்பாவிட்டால் அதை என்னிடம் சொல்லிவிடலாம். நானும் ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பது குறித்து சிந்திக்கலாம்.

நான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்பதற்கு என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளன. எனது பாஸ்போர்ட்டில் கூட கோர்க்கா படை தேர்வு மைய முகவரிதான் உள்ளது. அப்படியிருக்கையில் என்னை அங்கீகரிப்பதில் அரசிற்கு என்ன குழப்பம், ஏன் அவர்கள் இதுபோன்ற நடந்து கொள்கிறார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். ஜிது ராய் நேபாளத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in