Published : 29 Feb 2024 06:25 AM
Last Updated : 29 Feb 2024 06:25 AM

நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் இன்று மோதல்

கோப்பையுடன் பாட் கம்மின்ஸ், டிம் சவுதி.

வெலிங்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டன் நகரில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகியது. நியூஸிலாந்து மண்ணில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி.

கடந்த 30 ஆண்டுகளில் இரு அணிகள் இடையே நடைபெற்ற 29 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை ஒரே ஒரு முறை மட்டுமே தோற்கடித்துள்ளது நியூஸிலாந்து அணி. இம்முறை இந்த சோகங்களுக்கு நியூஸிலாந்து அணி முடிவு கட்டக்கூடும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து தற்போது முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 3-வது இடம் வகிக்கிறது.

பேசின் ரிசர்வ் மைதானம் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வலுவானவேகப்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாற்றம் கண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும்.

இது ஒருபுறம் இருக்க வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆஸ்திரேலிய அணிகூடுதல் முனைப்பு காட்ட வேண்டியநிலையில் உள்ளது. அந்த அணி கடைசியாக 2016-ம் ஆண்டு நியூஸிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட்தொடரை 2-0 என முழுமையாக வென்றது. இதன் பின்னர் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட்தொடரை கைப்பற்றியது. இதைத் தவிர்த்து அந்நிய மண்ணில் ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 4 தொடர்களை டிராவில் முடித்துள்ளது. இரு முறை ஆஷஸ் தொடரை டிரா செய்த ஆஸ்திரேலிய அணி 2017 மற்றும் 2023-ம் ஆண்டில் இந்தியாவிடம் தொடரை இழந்தது.

பேசின் ரிசர்வ் டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனை ஆஸ்திரேலிய அணி நேற்றே அறிவித்தது. 3 பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள், 2 மிதவேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கலவையில் விளையாடும் லெவன் அமைந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக கேப்டன் பாட் கம்மின்ஸுடன் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் இடம் பெற்றுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளராக நேதன் லயன் சேர்க்கப்பட்டுள்ளார். மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான்கவாஜா, மார்னஷ் லபுஷேன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் வலுவான வீரர்களாக திகழக்கூடியவர்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அலெக்ஸ் கேரி உள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி வரும் ஸ்டீவ் ஸ்மித், 4-வது வரிசையில் விளையாடும் கேமரூன் கிரீன் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கேமரூன் கிரீன் சமீபத்தில் ஷெப்பீல்டு ஷீல்டு தொடரில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கி சதம் விளாசியிருந்தார்.

நியூஸிலாந்து அணியில் காயம்காரணமாக முன்னணி பேட்ஸ்மேனான டேவன் கான்வே விலகி உள்ளார். இது நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் அந்த இடத்தை இளம் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா நிரப்பக்கூடும். மேலும் டேரில் மிட்செல் அணியின் முக்கிய காரணியாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சராசரி 53.46-ஐ கொண்டுள்ள டேரில்மிட்செல் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

டி 20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேன் வில்லியம்சனும் அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. எனினும் இம்முறை விளையாடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் இடம்பெறக்கூடும். பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக மேட் ஹென்றி, டிம் சவுதி, வில்லியம் ஓ’ரூர்கே ஆகியோர் இடம் பெறக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x