Published : 18 Feb 2018 05:11 PM
Last Updated : 18 Feb 2018 05:11 PM

நன்றி மறந்தவரானாரா பயிற்சியாளர் ஹதுரசிங்கா?-இலங்கை வெற்றியின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சை

வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளாராக ஹதுரசிங்கா 2014 முதல் இருந்து வந்தார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் பயிற்சிப்பொறுப்பிலிருந்து விலகினார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் ஒருநாள் முத்தரப்பு தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இலங்கை வென்றதன் பின்னணியில் வங்கதேசப் பயிற்சியாளராக இருந்த ஹதுரசிங்கவின் கைவண்ணம் உள்ளது, வங்கதேசப் பயிற்சியாளராக இருந்து திடீரென காரணம் கூறாமல் விலகியதன் பின்னணியிலும் இலங்கையின் வெற்றியின் பின்னணியிலும் ஹதுரசிங்க வங்கதேச வீர்ர்கள் பற்றிய ‘உள்தகவல்களை’ இலங்கை அணிக்கு தகவல் அளித்திருப்பார் என்றும் நன்றி மறந்த இந்தச் செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கை பயிற்சியாளர் ஹதுரசிங்காவே இதனை ஒப்புக் கொள்ளும் விதமாகக் கூறிய போது, “ஆம். உண்மையைக் கூற வேண்டுமென்றால் வங்கதேச வீரர்கள் பற்றிய தகவல்கள் உதவியது. சிலவீர்ர்களுக்கு எதிராக திட்டங்களை வகுக்க முடிந்தது. நெருக்கடியில் அவர்கள் எப்படி வினையாற்றுவார்கள் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. நான் எதையும் விட்டுவைக்கவில்லை. இது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது. இந்தத் தொடர் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கும் தொடராக அமைந்தது. ஆனாலும் நான் வங்கதேசத்தை விட்டு வந்தாலும் அவர்கள் சிறப்பாக ஆட வேண்டும் என்றே விரும்பினேன். அவர்கள் முன்னேற்றத்தில் எனக்கு ஒரு கண் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஹதுரசிங்கா கொடுத்த தகவல்களில் குறிப்பாக ஒருநாள் தொடரில் வங்கதேச வீரர்களுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு கைகொடுக்கும் என்பது பெரிய அளவில் இலங்கைக்கு உதவி புரிந்துள்ளது. இது நிச்சயம் ஹதுரசிங்கவின் தகவல் இல்லாமல் வாய்ப்பில்லை. அதேபோல் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஹதுரசிங்காவின் தகவல்களின் அடிப்படையில்தான் இலங்கை கூடுதல் பவுலரை இலங்கை சேர்த்ததும், மிர்பூரில் ஸ்பின் சாதக ஆட்டக்களம் என்று தனஞ்ஜயாவையும் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் வங்கதேச இடது கை பேட்ஸ்மென்களுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசினால் திணறுவார்கள் போன்ற தகவல்களும் ஹதுரசிங்கா மூலமே இலங்கைக்குக் கிடைத்திருக்க வாய்ப்பு என்று கருதப்படுகிறது.

வங்கதேச வீரர் மஹ்முதுல்லாவும் இதனை ஆமோதித்து, “ஹது எங்களுடன் சமீபமாக இருந்தார். அவருக்கு எங்களைப் பற்றி அனைத்து விவரங்களும் தெரியும். நிச்சயம் இந்தத் தகவல்களை அவர் பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் தரமான கோச், நாங்கள் எங்கள் பணியைத் திறம்பட செய்திருந்தால் நாம் இது பற்றி பேச வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x