Published : 26 Feb 2024 07:50 AM
Last Updated : 26 Feb 2024 07:50 AM

சர்வதேச போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டனுக்கு தகுதி இல்லை: வனிந்து ஹசரங்கா குற்றச்சாட்டு

கொழும்பு: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் செயல்படுவதற்கு நடுவர் லிண்டன் ஹன்னிபாலுக்கு தகுதி இல்லை என்று இலங்கை அணி கேப்டன் வனிந்து ஹசரங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி தம்புல்லா நகரில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. பின்னர் இலங்கை அணி விளையாடியது. ஆட்டத்தின் கடைசி ஓவரை, ஆப்கானிஸ்தான் வீரர் வபதார் மொமண்ட் பந்து வீசினார். மொமண்ட் வீசிய 4-வது பந்து இடுப்பு உயரத்தைத் தாண்டி வந்தது. ஆனால் அந்தப் பந்துக்கு கள நடுவர் லிண்டன் ஹன்னிபால் நோ-பால் தரவில்லை.

இதையடுத்து களத்துக்கு வந்த கேப்டன் ஹசரங்கா, கள நடுவர் ஹன்னிபாலுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதுதொடர்பாக ஐசிசி போட்டி நடுவரிடம் புகார் செய்யப்பட்டது. ஹசரங்கா செய்தது தவறு எனஐசிசி விசாரணை குழு அறிக்கை அளித்த பிறகு, ஹசரங்காவுக்கு 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டன. கடந்த 24 மாதங்களில், இதற்குமுன் 2 டிமெரிட் புள்ளிகள் ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டிருந்தன. 24 மாதத்தில் 4 டிமெரிட் புள்ளிகளை தாண்டிவிட்டதால், ஹசரங்கா ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லதுஇரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தொடரையடுத்து வங்கதேசத்துக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. எனவே, வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடுவர் லிண்டன் ஹன்னிபாலுக்கு எதிராக வனிந்து ஹசரங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சர்வதேச போட்டிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஆப்கானிஸ்தான் வீரர் மொமண்ட் வீசிய பந்து இடுப்பு உயரத்துக்கு அருகே வந்திருந்தால் கூட பிரச்சினை இல்லை. ஆனால் இடுப்பு உயரத்துக்கு மேலே அந்த பந்துவந்தது. மேலும், அந்த பந்து இலங்கை வீரரின் தலையிலும் தாக்கியிருக்கும்.

ஆனால் இந்த பந்துக்கு நடுவர், நோ-பால் வழங்கவில்லை. இதைக் கூட கவனிக்க முடியாத நிலையில் அந்த நடுவர் ஹன்னிபால் இருக்கிறார். பந்து எவ்வளவு உயரத்தில் செல்கிறது என்பதை பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் (நடுவர்) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் செயல்பட தகுதி இல்லை. அவர் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்லலாம். இந்த டி20 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x