Published : 02 Feb 2018 04:52 PM
Last Updated : 02 Feb 2018 04:52 PM

300 ரன்கள் தேவை, பவுலர்களைக் குறை கூறுவது நியாயமல்ல: தெ.ஆ. கேப்டன் டுபிளெசிஸ்

டர்பன் ஒருநாள் போட்டி தோல்வி குறித்து சதமெடுத்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ், கூடிய மட்டும் இந்தியா இலக்கை எட்டுவதை கடினமாக்கினோம் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, ரஹானேயின் அபார கூட்டணியில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் சற்று எளிதாகவே வென்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தோல்விக்கு பவுலர்களைக் குறைகூறுவது நியாயமாகாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:

ஒரு பேட்டிங் அணியாக 2-வது அதிகபட்ச ஸ்கோர் 30-40 என்றிருப்பது கூட்டணி ரன் சேர்ப்பு அதிகம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டின் அடிப்படையே கூட்டணியாக ரன்கள் சேர்ப்பதே.

இந்திய ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர், இருப்பினும் நாம் இன்னும் சிறப்பாக அவர்களை ஆடியிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

நிச்சயம் 300 ரன்கள் தேவை. இந்தப் பிட்சில் 269 ரன்கள் போதாது. இங்கு ஆடிய கடந்த 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தே வெற்றி பெற்றோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 370 ரன்களை வெற்றிகரமாக துரத்தினோம். எனவே பவுலர்கள் மீது குறைகூறுவது நியாயமாகாது.

பிட்ச்சின் தன்மை, பவுலர்கள் இந்திய பேட்ஸ்மென்களை வீழ்த்த எடுத்துக் கொண்ட முயற்சி அவர்களுக்கு சற்று கடினப்பாட்டை அளித்தது. களவியூகத்தை எப்படியும் மாற்றிப்பார்த்தேன், ஆனால் கோலி, ரஹானே மிகச்சிறப்பாக ஆடினர். 60-70 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் பவுலர்களுக்கு எளிதாக அமைந்திருக்கும்.

இந்த அணியில் குல்தீப் யாதவ், சாஹலை அதிகம் பேர் எதிர்கொண்டதில்லை, ஐபிஎல் போட்டிகளில் சிலர் எதிர்கொண்டிருக்கலாம், புதிர் ஸ்பின்னோ, ரிஸ்ட் ஸ்பின்னோ ஒன்றிரண்டு போட்டிகள் ஆடினால்தான் அவர்கள் கையின் நிலை, பந்தின் தையல் நிலை ஆகியவற்றுக்கு பழக முடியும்.

இந்தத் தோல்விக்குப் பிறகு நிறைய ஆலோசனைகளை மேற்கொண்டோம். 2-வது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மேலும் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x