Published : 07 Feb 2018 03:51 PM
Last Updated : 07 Feb 2018 03:51 PM

51 வயதிலும் அதே ஸ்விங்: ஷோயப் மாலிக்கை 2 ரன்களில் வீழ்த்திய வாசிம் அக்ரம்

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சு லெஜண்ட் வாசிம் அக்ரம் ஓய்வு பெற்று 14 ஆண்டுகள் ஆகியிருக்கும். ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட அவர் தன் வயதையும் முறியடித்து 51 வயதில் தன் பழைய ஸ்வின் பவுலிங்கை வெளிப்படுத்தி தற்போது ஆடிவரும் ஷோயப் மாலிக்கை எட்ஜ் செய்ய வைத்தது, ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான முல்டான் சுல்தான் அணிக்காக காட்சிப் போட்டி ஒன்றில் ஆடினார். அப்போது பந்து வீசிய வாசிம் அக்ரம் தன் 51 வயதையும் பொருட்படுத்தாமல் அபாரமான ஸ்விங் பவுலிங்கை வீசியுள்ளார்.

அதுவும் இக்கால வீரர் ஷோயப் மாலிக், அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கும் தொடக்க வீரர் இம்ரான் நஸீர், ஆகியோரையும் தன் ஸ்விங்கினால் அசத்தினார் வாசிம் அக்ரம். வீசிய ஸ்பெல்லில் ஓரளவுக்கு இம்ரான் நஸீர் சமாளிக்க ஷோயப் மாலிக் 2 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

நட்புரீதியான இந்தப் 10 ஓவர் போட்டியில் சுல்தான் லெவன் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்ட வாசிம் அக்ரம், மாலில் டூபான் அணிக்கு எதிராக ஆடினார். இந்த ஸ்பெல்லில் ஷோயப் மாலிக் முதல் பந்து சற்றே ஸ்விங் ஆக பீட்டன் ஆனார். ஆனால் இரண்டாவது பந்து இன்னும் வைடாகச் செல்ல அதனை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷோயப் மாலிக். விக்கெட்டை வீழ்த்தியவுடன் அதே பழைய பாணியில் அதனைக் கொண்டாடினார் வாசிம்.

ஓய்வு பெற்று ஆண்டுகளாகியும் 51 வயதில் வந்து நடப்பு வீரர் ஒருவரை வாசிம் அக்ரம் வீழ்த்தியது ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

தன் உச்சகட்ட பந்து வீச்சு காலக்கட்டத்தில் அனைத்து அணியின் தொடக்க வீரர்களை தன் ஸ்விங் மற்றும் வேகத்தினால் கடுமையாக அச்சுறுத்தியவர் வாசிம் அக்ரம். அதுவும் அந்த ‘டெட்லி இன்ஸ்விங்கர்’ எப்போது விழும் என்று பேட்ஸ்மென்கள் தங்கள் கால்களை ஒடுக்கியவண்ணம் ஆட நேரிடும்.

தன் கிரிக்கெட் வாழ்வில் டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் வாசிம் அக்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x