“அடுத்தகட்டம் அறுவை சிகிச்சையே” - ஐபிஎல் தொடரை தவறவிடும் முகமது ஷமி?

“அடுத்தகட்டம் அறுவை சிகிச்சையே” - ஐபிஎல் தொடரை தவறவிடும் முகமது ஷமி?
Updated on
1 min read

மும்பை: காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தவர் ஷமி. 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். இதில் 3 போட்டிகளில் 5+ விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி இருந்தார் ஷமி. அதன்பின் இடது கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஜனவரி கடைசி வாரத்தில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகவும் அதன்பின் அவரால் சிறிது ஓட முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அவரது காயம் கவலைக்குரிய வகையில் இருப்பதால் இம்முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "அடுத்தகட்டம் அறுவை சிகிச்சையே. விரைவில் அறுவை சிகிச்சைக்காக ஷமி இங்கிலாந்துக்கு செல்லலாம். எனவே, ஐபிஎல் தொடரில் இந்த முறை அவர் ஆடுவது கேள்விக்குறியே." என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், குஜராத் அணி தரப்பில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தனர் ஷமி. இந்த இரண்டு சீசன்களில் குஜராத் அணி ஒருமுறை கோப்பை வெல்வதற்கும், ஒரு முறை பைனலுக்கு செல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார். 2022-ல் 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி, 2023 சீசனில் 28 விக்கெட்டுகள் சாய்த்தார். இதனால் அவர் இல்லாதது குஜராத் அணிக்கு பின்னடைவாக அமையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in