147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை

147 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை
Updated on
1 min read

ராஜ்கோட்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 22 சிக்ஸர்கள் விளாசப்பட்டு 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரே இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை (1996-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக) ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.

மேலும் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 20 அல்லது அதற்கும் அதிகமான சிக்ஸர்களை டெஸ்ட் தொடரில் விளாசி புதிய உலக சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்தத் தொடரில் இதுவரை அவர் 22 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இதுவும் ஒரு உலக சாதனையாகும்.

மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் அணி சார்பில் அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்டதும் இந்தத் தொடரில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் இதுவரைஇந்திய அணி சார்பில் 48 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2019-ல் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய அணி 47 சிக்ஸர்கள் விளாசியதே உலக சாதனையாக அமைந்திருந்தது. இதை தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் முறியடித்துள்ளனர்.

ஒரு இன்னிங்ஸில் 18 சிக்ஸர்கள்: இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் மட்டும் இந்திய அணி வீரர்கள் 18 சிக்ஸர்களை பறக்க விட்டு சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு 2009-ல் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தரப்பில் 15 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அதையும் தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது.

கங்குலியை முந்திய ஜெய்ஸ்வால்: மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய இடதுகை ஆட்டக்காரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2005-ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 537 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது.

அதை தற்போது ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் தொடரில் முறியடித்துள்ளார். இந்தத் தொடரில் இதுவரை அவர் 545 ரன்கள் குவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in