எய்டன் மார்க்ரம் விஷயத்தில் பொறுமையாக இருங்கள்: விராட் கோலி ஆதரவுக் குரல்

எய்டன் மார்க்ரம் விஷயத்தில் பொறுமையாக இருங்கள்: விராட் கோலி ஆதரவுக் குரல்
Updated on
1 min read

இளம் அணித் தலைவர்கள் என்று வரும்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கும். விராட் கோலியைத் தவிர வேற யாருக்கும் அது பற்றி நன்றாகத் தெரிந்திருக்காது.

எய்டென் மார்க்ரம் இளம் அணித்தலைவராக தொடர தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் நினைக்கவேண்டும் என்றும், நல்ல தலைவருக்குத் தேவையான பண்புகள் அவரிடம் உள்ளன என்றும் கோலி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-5 என்ற கணக்கில் தொடரை இழந்தது. தாய்மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் இழக்கும் முதல் ஒருநாள் தொடர் இது. முதல் ஒருநாள் போட்டியில், ஃபாப் டூ ப்ளெஸ்ஸி அணித் தலைராக இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போனதால் மார்க்ரம் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

மார்க்ரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணித் தலைவர் விராட் கோலி, "அவர் மாகாண கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்திருக்கிறார். ஜூனியர் அண்டர் 19 அணிக்கும் தலைவராக இருந்து உலகக் கோப்பையை வென்றிருக்கிறார். அவரிடத்தில் பொறுமை காட்டுங்கள் என்றே நான் சொல்வேன். ஏனென்றால் அவர் தான் உங்கள் அணியின் அடுத்த தலைவர். மிகச்சிறந்த பேட்ஸ்மேனும்கூட. அவர் ஆடுவதைப் பார்ப்பதே அலாதியாக இருக்கும்.

 ஒரு பேட்ஸ்மேனாக ஆதிக்கம் செலுத்தும் திறமை அவருக்குக் கண்டிப்பாக இருக்கிறது. அணித்தலைவராக களத்தில் ஆதிக்கம் செலுத்தும் சரியான மனநிலையும் அவரிடத்தில் இருக்கிறது. அவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அவரது நிலையை என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் நானும் அந்த நிலையில் இருந்திருக்கிறேன். அவர் சரியான பாதையில் இருக்கிறார் என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.

அணித் தலைமை எளிதான விஷயமல்ல. அது எனக்குத் தெரியும். அதிலும் அணி தோல்வியடையும்போது இன்னும் கடினம். அவரது பேட்டிங் என்னை ஈர்த்தது. அணித் தலைவராகவும் அவர் களத்தில் பதட்டமின்றி பொறுமையாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

நினைத்தது எதுவும் நடக்காத போது அந்த நிலையைக் கையாள்வது எளிதான காரியமல்ல. ஆனால் மார்க்ரம் பொறுமையை இழப்பவரல்ல. அது மிகச்சிறந்த நேர்மறையான விஷயம் என நான் நினைக்கிறேன்" என்று முடித்தார் கோலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in