மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி: சென்னை பெருநகர காவல்துறை அணிக்கு சாம்பியன் பட்டம்

காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் சென்னை பெருநகர காவல்துறை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது |  படம் : ஜெ.மனோகரன்
காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியில் சென்னை பெருநகர காவல்துறை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது | படம் : ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோவை: கோவையில், நடைபெற்று வந்த காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டியின் இறுதியில், சென்னை பெருநகர காவல்துறை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழ்நாடு காவல்துறை சார்பில், 63-வது காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை பெருநகர காவல் ஆணையரக அணி, தாம்பரம் காவல் ஆணையரக அணி, ஆவடி காவல் ஆணையரக அணி, ஆயுதப்படை அணி, தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு அணி ஆகிய 9 அணிகள் சார்பில், 687 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஓட்டப் பந்தயம், தொலைதூர ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், சைக்கிளிங், கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தடகளப் போட்டிகளின் நிறைவு விழா இன்று நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம், ஓட்டப் பந்தயம், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் இன்று (பிப்.16) நடத்தப்பட்டன. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்று சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆயுதப்படை அணியின் மணிகண்டன், மோனிஸ், சென்னை பெருநகர காவல்துறையின் லோகநாதன் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில், சென்னை பெருநகர காவல்துறையின் அனுபிரியா, சசிகலா, மேற்கு மண்டல காவல்துறையின் மகேஸ்வரி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். அதேபோல், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் பதக்கங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இத்தொடரில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை 291 புள்ளிகள் பெற்று சென்னை பெருநகர காவல்துறை அணி கைப்பற்றியது. அதேபோல், 236 புள்ளிகள் பெற்று மேற்கு மண்டல காவல்துறை 2-ம் இடம் பிடித்தது. இவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஹெச்.எம்.ஜெயராம் ஆகியோர் கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினர். இந்நிகழ்வில், ஆயுதப்படை ஐஜி லட்சுமி, காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in