Published : 16 Feb 2018 06:02 PM
Last Updated : 16 Feb 2018 06:02 PM

ஆஸி. உலக சாதனை விரட்டல் போட்டியில் உடைந்த ரெக்கார்டுகள்

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் போட்டியில் 38.5 ஓவர்களில் 488 ரன்கள் குவிக்கப்பட்டது உட்பட நிறைய டி20 சாதனைகள் உடைக்கப்பட்டுள்ளன. அந்தப் புள்ளிவிவரங்கள் சிலவற்றை காண்போம்.

அனைத்து டி20 போட்டிகளிலும் 244 ரன்கள் இலக்கை இதுவரை யாரும் விரட்டியதில்லை, எனவே ஆஸ்திரேலியா நிகழ்த்தியுள்ள டி20 உலகசாதனை தற்போது முதலிடத்தில் உள்ளது.

2015-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 232 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டியது 2வது இடத்திலும், 2016-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 230 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது 3வது இடத்திலும் உள்ளது.

ஒரே டி20 போட்டியில் 488 ரன்கள் என்பது 2வது அதிகபட்ச ஸ்கோராகும். 2016-ம் ஆண்டு இந்தியா-மே.இ.தீவுகளுக்கு இடையே லாடர்ஹில்லில் நடைபெற்ற போட்டியில் தோனி வெற்றி ஷாட்டை அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்து இந்திய அணி 1 ரன்னில் தோற்ற போட்டிதான் ஒரு டி20 போட்டியில் இருஅணிகளும் சேர்ந்து எடுத்த அதிக ரன் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மார்டின் கப்தில் 2188 ரன்களுடன் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார், இதனை தனது 71வது டி20 இன்னிங்சில் சாதித்துள்ளார் கப்தில். சக வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 70 இன்னிங்ஸ்களில் 2140 ரன்களை எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. மேலும் டி20-யில் ஒரு சதத்துக்கு மேல் எடுத்த 7வது வீரரானார் மார்டின் கப்தில். இதிலும் மெக்கல்லம், கொலின் மன்ரோ முன் உதாரணமாகத் திகழ்ந்துள்ளனர்.

இந்தப் போட்டியில் மொத்தம் 32 சிக்சர்கள் விளாசப்பட்டது, இது இணை சாதனையாகும். 2016 லாடர்ஹில் இந்திய-மே.இ.தீவுகள் போட்டியிலும் 32 சிக்சர்கள் விளாசப்பட்டது.

நியூஸிலாந்தின் 243 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அணி எடுக்கும் அதிகபட்ச டி20 ஸ்கோராகும்.

ஆஸ்திரேலிய பவுலர் ஆண்ட்ரூ டை இன்று 64 ரன்கள் விட்டுக் கொடுத்தது டி20 கிரிக்கெட்டில் 3வது இணை மோசப் பந்து வீச்சாகும்.

இன்றைய டி20 பவர் பிளேயில் ஆஸ்திரேலியா எடுத்த 91 ரன்கள் டி20-யில் இணை அதிகபட்ச ஸ்கோராகும்.

முதல் விக்கெட்டுக்காக இரு அணிகளும் சதக்கூட்டணி அமைத்த வகையில் இதுவே முதல் போட்டியாகும், மார்டின் கப்தில், மன்ரோ 132 ரன்களையும் வார்னர்-ஷார்ட் ஜோடி 121 ரன்களையும் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x