Published : 15 Feb 2024 05:39 AM
Last Updated : 15 Feb 2024 05:39 AM
ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. கணிக்க முடியாத அணியாகவும் அச்சமின்றியும் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.
இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதில் இருந்து மீண்டு வந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்து. இதனால் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இந்நிலையில் 3-வது போட்டியில் இரு அணிகளும் இன்று காலை 9.30 மணிக்கு ராஜ்கோட்டில் மோதுகின்றன.
முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் ஏமாற்றம் அளித்தது. இந்திய அணி வெற்றி பெற்ற 2-வது போட்டியில் கூட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ரன்கள் குவித்திருந்தனர். கே.எல்.ராகுல், விராட் கோலி,ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இல்லாத நிலையில் நடுவரிசையில் அனுபவம் இல்லாத வீரர்களே களமிறங்க வேண்டிய நிலை உள்ளது.விசாகப்பட்டினம் போட்டியில் அறிமுக வீரராக இடம் பெற்ற ரஜத்பட்டிதார் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ராஜ்கோட் போட்டியில் சர்பராஸ்கான் அறிமுக வீரராக களமிறங்கக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஸ்ரீகர் பரத்துக்கு பதிலாக அதிரடியாக விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல் அறிமுக வீரராக களமிறங்கக்கூடும். இது ஒருபுறம் இருக்க கடந்த இரு ஆண்டுகளாக பேட்டிங்கில் அதிரடி அணுகுமுறையை காட்டி வரும் ரோஹித் சர்மா அதற்குரிய பலனை அறுவடைய செய்ய முடியவில்லை.
இதனால் அவர் தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது குறித்து சிந்திக்கக்கூடும். விசாகப்பட்டினம் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து மேலும்ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
காயத்தில் இருந்து மீண்டுள்ள ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளது பலம் சேர்க்கக்கூடும். ஜடேஜா திரும்பி உள்ள நிலையில் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் நீக்கப்படக்கூடும். ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்கள் மைல்கல் சாதனையை எதிர்நோக்கி உள்ளார். இந்த சாதனையை எட்டஅவருக்கு மேற்கொண்டு ஒருவிக்கெட் மட்டுமே தேவையாக உள்ளது.இதை அவர், ராஜ்கோட் போட்டியில் கைப்பற்றி முத்திரைபதிக்கக்கூடும்.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் விசாகப்பட்டினம் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்திய ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் ஒரு முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அவருடன் மற்றொரு தொடக்க பந்து வீச்சாளராக முகமது சிராஜ் களமிறங்கக்கூடும். இங்கிலாந்து அணியானது அதிரடி பேட்டிங்அணுகுமுறையால் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் சிறப்பாக தொடங்கியது. ஆனால்விசாகப்பட்டினம் போட்டியில் இந்த அணுகுமுறை கைகொடுக்கவில்லை. இன்றைய போட்டி கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். கடந்த 2016-ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 126 ரன்கள் விளாசியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.
ராஜ்கோட் ஆடுகளம் வழக்கமாக பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். இதை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திறம்பட பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளராக மார்க்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த ஆட்டத்தில் 3-வது வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற்றிருந்த ஷோயிப் பஷீர் நீக்கப்பட்டுள்ளார். பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜோ ரூட்டும் சுழலில் பலம் சேர்க்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT