Published : 21 Feb 2018 07:57 AM
Last Updated : 21 Feb 2018 07:57 AM

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல விரும்புகிறேன்: மனம் திறக்கும் பி.வி.சிந்து

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல விரும்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பி.வி.சிந்து கூறியதாவது:

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல விரும்புகிறேன். கடந்த முறை பெற்ற வெள்ளிப் பதக்கத்தின் நிறத்தை வரும் ஒலிம்பிக்கில் தங்கமாக மாற்ற விருப்பம் உள்ளது. நான் எனது கனவை துரத்துகிறேன். நிச்சயம் அதை அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு பெரிய அளவில் அமைந்துள்ளது. ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடர் பிர்மிங்காமில் அடுத்து நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இறுதியில் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.

உலக சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ஓபன் தொடரின் இறுதி போட்டிகளில் நெருக்கமாக வந்து தோல்வியடைந்தேன். எனினும் தவறுகளில் இருந்து நான் பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். ஏற்ற, இறக்கங்கள் நிகழத்தான் செய்யும். இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியடைந்தால் கவலைப்படக்கூடாது. ஒவ்வொரு தொடரும் வித்தியாசமானது. மற்ற ஆட்டங்களுடன் ஒப்பிடும் போது உலக சாம்பியன்ஷிப் ஆட்டம்தான் நான் விளையாடிய ஆட்டங்களிலேயே நீண்ட நேரம் நடைபெற்றது.

தற்போது ஆட்டத்தில் சேர்க்கப்படும் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 21 புள்ளிகளுக்கு பதிலாக 11 புள்ளிகள் கொண்டு 5 செட்களாக ஆட்டத்தை நடத்தலாமா என ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 21 புள்ளிகளே தொடர வேண்டும் என கருத்து கூறியுள்ளேன். 11 புள்ளிகள் என்றால் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம். 5 புள்ளிகளை இழந்தால் மீண்டு வரமுடியாது. 21 புள்ளிகள் என்றால் 5 புள்ளிகளை இழந்தாலும் மீண்டு வரமுடியும்.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x