

மும்பை: முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயன்படுத்தும் பேட்களை அவருக்கு செய்து கொடுக்கும் BAS நிறுவன உரிமையாளரான சோமி கோலி என்பவர் தோனி குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
பீட் ஆல் ஸ்போர்ட்ஸ் (BAS) உரிமையாளர் சோமி கோலி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "2019 உலகக் கோப்பைக்கு முன்பாக தோனி என்னை அழைத்து எங்கள் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை அனுப்பி வைக்குமாறும் அதை தன்னுடைய பேட்டில் பயன்படுத்தப்போவதாகவும் கூறினார். மேலும், இதற்காக எந்தவிதமான பணமும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தோனி தெரிவித்தார்.
ஒரு நட்சத்திர வீரர் இதுபோல பணமில்லாமல் பேட்களை பயன்படுத்தப்போகிறார் என்றால் பல கோடி ரூபாய் ஒப்பந்தங்களை இழக்க வேண்டியிருக்கும். இதனை தோனியிடம் வெளிப்படுத்தி இதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தேன். ஆனால் தோனியோ, 'எனது ஆரம்பகால கட்டத்தில் நீங்கள் எனக்கு உதவியிருக்கிறீர்கள். இப்போது நான் உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும்' என்று எங்கள் நிறுவன ஸ்டிக்கர்களை பயன்படுத்தினார் தோனி. உண்மையிலேயே அவருக்கு மிகப் பெரிய மனது" என்று BAS நிறுவன உரிமையாளர் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
பின்னணி: தோனியின் பயோபிக் படமான 'MS Dhoni The Untold Story' இந்த சோமி கோலி கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். தோனியின் நண்பராக வரும் பரம்ஜித் சிங் என்கிற கதாபாத்திரம் தோனிக்கான கிரிக்கெட் கிட்கள் செய்யக்கோரி சோமி கோலியிடமே அணுகியிருப்பார். அதில் காட்டப்பட்டது போலவே, நிஜத்தில் தோனிக்கு முதல்முதலாக கிட்களை ஸ்பான்சர் செய்தது சோமி கோலி. இதற்கு முந்தையை பேட்டி ஒன்றிலும் சோமி கோலி இதனை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.