சர்வதேச டென்னிஸ் தரவரிசை சுமித் நாகல் 98-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை சுமித் நாகல் 98-வது இடத்துக்கு முன்னேற்றம்
Updated on
1 min read

சென்னை: ஏடிபி ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல் 23 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தை பிடித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் இத்தாலியின் லூகா நார்டியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ஏடிபி தரவரிசையில் 23 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த மாதம், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சுமித் நாகல் உலக தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்கை தோற்கடித்திருந்தார். இதன் மூலம் 35 ஆண்டுகளில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் போட்டித் தரவரிசையில் உள்ள வீரரை தோற்கடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஏடிபி தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறி உள்ள இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சுமித் நாகல். கடைசியாக இடது கை வீரரான பிரேஷ்னேஷ் குணேஷ்வரன் 100 இடங்களுக்குள் இருந்தார்.

ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் தொடரில் பட்டம் வென்ற பின்னர் சுமித் நாகல் கூறும்போது, “ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் கனவும் குறைந்தபட்சம் முதல் 100இடங்களுக்குள் வர வேண்டும் என்பதுதான். நான் முன்பு கூறியது போல், சொந்த நாட்டில், சொந்த ரசிகர்கள் முன்னிலையில் சாம்பியன் பட்டம் வெல்வதைவிட சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை. கடந்த ஆண்டு தரவரிசையில் 500-வது இடத்தில் இருந்தேன். அறுவைசிகிச்சை, நிதி உதவி இல்லாதது என கடினமாக இருந்தது.

நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. ஒவ்வொரு நாளை நகர்த்தி செல்வதற்கும், போட்டியில் இங்கு இருப்பதற்கான வாய்ப்பை பெறுவதற்கான வழியைக் கண்டுபிடித்ததிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in