Published : 13 Feb 2024 07:13 AM
Last Updated : 13 Feb 2024 07:13 AM
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் இளம் இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இருப்பினும் இந்த தொடரில் உதய்சஹாரன் தலைமையில் விளையாடிய இந்திய அணி பலரதுஇதயங்களை வென்றது. அவர்களது செயல்திறன் பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் விதைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைதொடரில் கவனம் ஈர்த்த இந்திய வீரர்களின் ஓர் அலசல்...
உதய் சஹாரன்: உலகக் கோப்பை தொடர் முழுவதுமே கேப்டனாக உதய்சஹாரன் பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டார். அவர்,வயதுக்கு மீறிய முதிர்ச்சியை பேட்டிங்கில் வெளிப்படுத்தியிருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நெருக்கடியான நிலையில் அணியை மீட்டுவெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இந்தத் தொடரில் ஒரு சதம், 3 அரை சதம் என 397 ரன்கள் குவித்து அதிகரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.கிரிக்கெட் வாழ்க்கைக்காகவே உதய் சஹாரன் ராஜஸ்தானின் கங்கா நகரில் இருந்து பஞ்சாப் மாநிலக்கு குடிபெயர்ந்தார்.
சச்சின் தாஸ்: மகாராஷ்டிராவின் பீடு பகுதியைச் சேர்ந்த சச்சின் தாஸ், உலகக் கோப்பை தொடரில் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்கும் திறனால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அணியின் பேட்டிங்கில் பிரதான வீரராக திகழ்ந்த அவர், அபாயகரமான ஷாட்களை லாவகமாக கையாண்டார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதில் சச்சின் தாஸ் விளாசிய 96 ரன்கள் முக்கிய பங்கு வகித்திருந்தது. ஒட்டுமொத்தமாக அவர், இந்தத் தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதம் என 303 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்திருந்தார்.
முஷீர் கான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ள சர்பராஸ் கானின் சகோதரரான முஷீர்கான் தனது மட்டை வீச்சால் அணிக்கு பலம் சேர்த்தார். உலகக் கோப்பை தொடரில் முஷீர் கான் 2 சதங்கள், ஒரு அரை சதம் என 360 ரன்களை வேட்டையாடி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார். அவரது தந்தை நவுஷாத், மகன்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துள்ளார்.
சவுமி பாண்டே: ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பள்ளி ஆசிரியரின் மகனான சவுமி பாண்டே தனது துல்லியமான இடது கை சுழற்பந்து வீச்சால் உலகக் கோப்பை தொடரில் பல்வேறு ஆட்டங்களில் விக்கெட்கள் வீழ்த்தி திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார். சவுமி பாண்டேவை ஒரு ஃபிட்டான நபராக மாற்றுவதற்காகவே அவரது தந்தை கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தி உள்ளார். அங்கிருந்து தொடங்கிய தனது பயணத்தை தற்போது உலகக் கோப்பை வரை வெற்றிகரமாக எடுத்து வந்துள்ளார்.
அர்ஷின் குல்கர்னி: மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்த ஆல்ரவுண்டரான அர்ஷின் குல்கர்னி, யு-19 உலகக் கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னரேஐபிஎல் ஒப்பந்தத்தை பெற்றார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக அர்ஷின் குல்கர்னி ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். ஹர்திக் பாண்டியாவை போன்றே மிதவேகப்பந்து வீச்சுஆல்ரவுண்டரான அர்ஷின் குல்கர்னி தொடக்க பேட்ஸ்மேனாக வலம் வருகிறார்.
ராஜ் லிம்பானி: குஜராத் மாநிலம் கட்ச்சில் உள்ள ராண் பகுதியை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான ராஜ் லிம்பானி,உலகக் கோப்பை தொடரில் தொடக்க ஓவர்களில்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இடது கை பேட்ஸ்மேனான அவர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் சிக்ஸர் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். ராண் பகுதியில் உள்ள தயாபூர் கிராமத்தை சேர்ந்த ராஜ் லிம்பானி தனது கிரிக்கெட் கனவை அடைவதற்காக பரோடாவுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
பிரியன்ஷு மோலியா: ராஜ் லிம்பானியை போன்றே பிரியன்ஷு மோலியாவும் பரோடாவைச் சேர்ந்தவர். முதல் தர கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் விளையாடி அதிகபட்சமாக 144* ரன்கள் குவித்துள்ளார். ஆஃப் ஸ்பின் வீசக்கூடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவருக்கு தென்னாப்பிரிக்காவில் பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நமன் திவாரி: லக்னோவைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான நமன் திவாரி, ஜஸ்பிரீத் பும்ராவால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் இருந்து யார்க்கர்களை தரையிறக்கக் கற்றுக்கொண்டுள்ளார். உலகக் கோப்பை தொடரில் நமன் திவாரி19.83 சராசரியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்ஐசி முகவரின் மகனான இவர், கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பள்ளி படிப்பை தொடர்வதில் சிரமங்களை சந்தித்துள்ளார்.
முருகன் அபிஷேக்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் ஆஃப் ஸ்பின்னரான முருகன் அபிஷேக், ரவிச்சந்திரன் அஸ்வினை போன்றே பந்து வீசக்கூடியவர். உலகக் கோப்பை தொடரில் முருகன் அபிஷேக் அதிக விக்கெட்களை வேட்டையாடாவிட்டாலும், எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆரவெல்லி அவனிஷ் ராவ்: தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள பொத்துகல் கிராமத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ஆரவெல்லி அவனிஷ் ராவ், ரவி சாஸ்திரி மற்றும் ஆர்.தர் ஆகியோர் இணைந்து நடத்தும் அகாடமியின் தயாரிப்பு ஆகும். லிஸ்ட் ஏ போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி உள்ள ஆரவெல்லி அவனிஷ் ராவ், சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டது அவரது திறமைக்கு ஒரு சான்றாகும்.
ஆதர்ஷ் சிங்: கான்பூரைச் சேர்ந்த இடது கை தொடக்க பேட்ஸ்மேனான ஆதர்ஷ் சிங் பேட்டிங்கில் வலுவான தொடக்கம்அமைத்துக் கொடுக்கக்கூடியவர். உலகக் கோப்பை தொடரில்வங்கதேச அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 76 ரன்கள்விளாசி தொடரை வெற்றிகரமாக தொடங்கியதில் முக்கிய பங்காற்றினார். இறுதிப் போட்டியில் கூட ஆதர்ஷ் சிங் போராடி 77 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். ஆதர்ஷின் கிரிக்கெட் பயணத்தின் பின்னணியில் அவரது குடும்பத்தினர் செய்த தியாகங்களின் கதை உள்ளது. கரோனாபெருந்தொற்று காலக்கட்டத்தில் ஆதர்ஷ் சிங்கின் தந்தை மற்றும் அவரது சகோதரர் வேலையை இழந்தனர். எனினும் ஆதர்ஷ் சிங்கின் கிரிக்கெட் முயற்சிகள் தொடர்வதை அவரதுகுடும்பம் உறுதி செய்தது. அவருக்கு உதவி செய்வதற்காக சொந்தமாக இருந்த சிறிய நிலத்தையும் விற்றனர்.
ருத்ரா பட்டேல்: உலகக் கோப்பை தொடரில் ருத்ரா பட்டேலுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது தலைமையிலான குஜராத் அணி 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றிருந்தது. இதன் பின்னர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான வினு மன்கட் டிராபியில் குஜராத் அணியை வழிநடத்தினார். அந்தத் தொடரில் ருத்ரா பட்டேல் 3 சதங்கள் விளாசினார். இதில் இமாச்சல் பிரதேச அணிக்கு எதிராக விளாசிய இரட்டை சதமும் அடங்கும்.
இன்னேஷ் மகாஜன்: நொய்டாவைச் சேர்ந்த இன்னேஷ் மகாஜன், உலகக் கோப்பை தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்றிருந்தார். அவனிஷ் ராவ் அற்புதமாக செயல்பட்டதால் இன்னேஷுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. எம்எஸ் தோனியின் ரசிகரான இன்னேஷ் மகாஜன் இடது பேட்ஸ்மேன் ஆவார்.
தனுஷ் கவுடா: பெங்களூரைச் சேர்ந்த வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளரான தனுஷ் கவுடா முன்னாள் வீரர்களான ஜவகல் நாத் மற்றும் ஆர்.வினய் குமார் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்புகிறார். எனினும் அவருக்கு உலகக் கோப்பை தொடரில் போதிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது தந்தையும், சகோதரரும் கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் அடையாத இடத்தை அடைவதில் உறுதியாக உள்ளார்.
ஆராத்யா சுக்லா: கணித ஆசிரியரின் மகனான லூதியாணாவைச் சேர்ந்த மிதவேகப்பந்து விச்சாளரான ஆராத்யா சுக்லா, சி.கே.நாயுடு டிராபி மற்றும் கூச் பெஹார் டிராபி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT