

பெனோனி: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று பெனோனி நகரிலுள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகப்டசமாக ஹர்ஜாஸ் சிங் 64 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து, சவுமி பாண்டே பந்தில் வீழ்ந்தார். ஹாரி டிக்ஸன் 42, சாம் கோன்ஸ்டாஸ் 0, ஹுக்வெய்ப்ஜென் 48, ரியான் ஹிக்ஸ்20, ஆலிவர் பீக் 46, ராப் மெக்மில்லன 2, சார்லி ஆண்டர்சன் 13, டாம் ஸ்டிராக்கர் 8 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3, நமன் திவாரி 2, சவுமி பாண்டே, முஷிர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியினர் விளையாடினர்.
ஆனால் ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சால் இந்தியவீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டே இருந்தனர். அணியில் அதிகபட்சமாக ஆதர்ஷ் சிங் 47 ரன்கள் எடுத்தார். முருகன் அபிஷேக் 42 ரன்கள் சேர்த்தார்.
அர்ஷின் குல்கர்னி 3, முஷிர் கான் 22, கேப்டன் உதய் சஹாரன் 8, நமன் திவாரி 14, சவுமி பாண்டே 2 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 43.5 ஓவர்களில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் மஹ்லி பியர்ட்மேன் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைபெற்றார்.