Published : 26 Feb 2018 07:47 AM
Last Updated : 26 Feb 2018 07:47 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரையும் வென்றது இந்தியா: ரெய்னா, புவனேஸ்வர் குமார் அசத்தல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரையும் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்தியா 5-1 என்ற கணக்கில் அபாரமாக ஆடி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து டி20 தொடர் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றன. இதையடுத்து 3-வது டி20 ஆட்டம் நேற்று முன்தினம் கேப் டவுனில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் நிலையில் இரு அணிகளும் இருந்தன.

இதையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரையும் வசப்படுத்தியது. இந்த திரில்லிங்கான ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்காவின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர்.

முன்னதாக இந்திய அணி பேட்டிங்கின்போது ரோஹித் சர்மா 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் 40 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். இதையடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 27 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். மணீஷ் பாண்டே 13, ஹர்திக் பாண்டியா 21, எம்.எஸ். தோனி 12, தினேஷ் கார்த்திக் 13 ரன்கள் சேர்த்தனர்.

ஜூனியர் டாலா 3 விக்கெட்களும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களும், ஷம்சி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 7 ரன்னில் வீழ்ந்தார். டேவிட் மில்லர் 24 ரன்களும், கிளாசென் 7 ரன்களும் எடுத்து பெவிலியன் வந்தனர். ஆனால் கேப்டன் டுமினியும், ஜாங்கரும் அபாரமாக ஆடினர். டுமினி 55 ரன்கள் சேர்த்து வீழ்ந்தார். மறுபுறத்தில் ஜாங்கர் அபாரமாக ஆடி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன் குவித்தார்.கடைசி நேரத்தில் அவர் ரன்கள் குவித்ததால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் நிலையை எட்டியது. ஆனால் ஆட்டத்தின் கடைசி பந்தில் அணியின் ஸ்கோர் 165 ஆக இருந்தபோது ஜாங்கரை , புவனேஸ்வர்குமார் வீழ்த்தினார். இதையடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டது.

இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களும், பும்ரா, ஷர்துல் தாக்குர், பாண்டியா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகன் விருதை புவனேஸ்வர் குமாரும் வென்றனர். இதையடுத்து தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் வீழ்ந்தாலும், ஒரு நாள், டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது ரசிகர்களுக்கு திருப்தியாக அமைந்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x