Published : 07 Feb 2024 03:25 PM
Last Updated : 07 Feb 2024 03:25 PM

மும்பை இந்தியன்ஸ் விவகாரம்: மார்க் பவுச்சர் பேச்சுக்கு ரோகித் சர்மா மனைவி பதிலடி

மும்பை: குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பெரிய விலைக்கு மீண்டும் வாங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணி இவரை கேப்டனாகவும் உயர்த்தி ரோஹித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கொடுத்த விளக்கத்துக்கு ரோகித் சர்மாவின் மனைவி ரிதிகா ஒரு வரியில் பதிலடி கொடுத்துள்ளது வைரலாகியுள்ளது.

ரோஹித் சர்மா குறித்து மார்க் பவுச்சர் அளித்த விளக்கம் வருமாறு: ‘ரோகித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து அகற்றி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது முழுக்க முழுக்க கிரிக்கெட் காரணங்களுக்காகவே. மும்பை இந்தியன்ஸ் அணி ‘மாறும் காலக்கட்டத்தில்’ உள்ளது. இந்தியாவில் நிறைய பேருக்கு இது புரிவதில்லை. உணர்ச்சிபூர்வமாக அனைத்தையும் அணுகுகின்றனர். ஆனால் உணர்ச்சிகளை இதிலிருந்து அகற்றி விட வேண்டும். இது கிரிக்கெட் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு.

ரோகித் சர்மா இதன் மூலம் ஒரு வீரராக இன்னும் சிறப்பாக பங்களிப்புச் செய்ய முடியும். ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே கிரிக்கெட்டை விட பிற விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அதாவது போட்டோ ஷூட், விளம்பர நிகழ்ச்சிகள் என்று அமர்க்களப்படும். கிரிக்கெட் இங்கு இரண்டாம் பட்சம்தான். ரோகித் பற்றி நான் கூறுவதெல்லாம் அவர் ஓர் அருமையான வீரர். அவர் பல சீசன்களுக்கு கேப்டனாக இருந்து விட்டார். நன்றாகவும் செய்து விட்டார். இப்போது இந்திய அணியையும் வழிநடத்துகிறார்.

கடைசி 2 சீசன்களாக அவர் பேட்டிங்கில் சரியாக ஆடவில்லை. ஆனால் கேப்டனாக நன்றாகவே வழிநடத்தினார். மும்பை இந்தியன்ஸை ஒட்டுமொத்த குழுவாகக் கருதி கூறுகிறேன். ரோகித் சர்மா இன்னும் அவரது பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும்.

கேப்டன்சி சுமை இல்லாமல் ரோகித் நன்றாக அடித்து ஆட வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்திய அணியின் கேப்டனாக இருப்பதால் அவருக்கு ஹைப் அதிகம். அதோடு மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி சுமையும் சேர வேண்டாம். அவர் இறங்கும் போது கேப்டன்சி சுமை இல்லை என்றால் அவர் இன்னும் பேட்டிங்கை சிறப்பாகச் செய்ய முடியும். ரோகித் சர்மாவிடமிருந்து சிறப்பானவற்றை வெளிக்கொணர்ந்து மும்பை அணி பயனடைய வேண்டும் என்பதுதான்’ என்று பவுச்சர் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்த ரோகித் சர்மா மனைவி ரிதிகா, ‘இதில் பல விஷயங்கள் தவறு’ என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x