

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி மிகப்பெரியதா இல்லையா என்பதை ஊடகங்களே சொல்லட்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. ஆட்டம் முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி கலந்துகொண்டார். இதற்கு முன் நடந்த டெஸ்ட் மேட்ச் தொடரில் தோல்வியடைந்த பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளை கோலி எதிர்கொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது.
தற்போது ஒருநாள் தொடரின் வெற்றிக்குப் பிறகு, அதே அறையில் கோலி பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்ட விதம், அவரது காட்டம் குறையவில்லை என்பதையே காட்டியது.
வெளிநாட்டு களத்தில் இந்தியா பெற்றுள்ள மிகச்சிறந்த வெற்றி இதுவா என்ற கேள்விக்கு, அதை நீங்கள் தான் கூற வேண்டும் என சட்டென பதிலளித்தார் கோலி. மேலும் அவர் பேசுகையில், "ஒரு மாதத்துக்கு முன்பு நாங்கள் மோசமான அணி. ஆனால் இன்று இப்படியான கேள்விகள் கேட்கப்படுகிறது. நாங்கள் எங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளவில்லை. இது மிகப்பெரிய வெற்றியோ இல்லையோ, யார் ஆராய்ந்து எழுத நினைக்கிறார்களோ அவர்கள் எழுதத்தான் போகிறார்கள்.
90 சதவிதம் பேர் இரண்டு டெஸ்ட் தோல்விகளுக்குப் பிறகு எங்களுக்கு கரிசனம் காட்டவில்லை. இதே அறையில் உட்கார்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தேன். அதனால் எங்கிருந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை நான் புரிந்து வைத்துள்ளேன்.
நான் கனவுலகத்தில் வாழ்ந்து, அனைத்து பாராட்டுகளையும் ஏற்றுக்கொண்டு இங்கிருக்கப்போவதில்லை. ஏனென்றால் உண்மையாக அது எனக்கு முக்கியமல்ல. 2-0 என்ற கணக்கில் நாங்கள் பின்னடைவை சந்தித்தபோது அது முக்கியமல்ல, 5-1 என்ற வெற்றியின் போதும் அது முக்கியமல்ல. ஏனென்றால் வீரர்கள் அறையில் கிடைக்கும் மரியாதை தான் முக்கியம்." என்று கோலி பதில் சொன்ன தொனி அவரது காட்டத்தையே காட்டியது.
தென்னாப்பிரிக்கா அணியின் மூத்த வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால், அந்த அணிக்கு பின்னடைவா என்பது பற்றி கேட்டபோதும் கோலி சற்று எரிச்சலடைந்தார்.
"அந்த அணி எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை. அது எங்கள் கவலையும் இல்லை. நாங்கள் முடிந்த வரை சிறந்த அணியுடன் களத்தில் இறங்க நினைக்கிறோம். நாட்டுக்காக விளையாடுவதால், எப்போது விளையாடினாலும் சிறந்த மனநிலையில் இருந்து விளையாடுவோம். என்ன நடந்தாலும் அதுதான் எங்கள் நோக்கம்" என்று கோலி பதிலளித்தார்.