

ஜிம்பாவே அணியின் வீரர் பன்யாங்கரா விளையாட்டுத் தனமாக மிட்செல் ஜான்சன் தொடர்பான ஒரு வீடியோவை தன் அணி சகாக்களிடம் பகிர்ந்து கொள்ள அவர் அணியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் முதல் போட்டியில் ஜிம்பாவேயைச் சந்திக்கும் முன்னர் இதனை பன்யாங்கரா செய்தது பெரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இதனால் ஒரு போட்டித் தொகையையும் இழந்த அவர், முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அவர் என்ன வீடியோவைப் பகிர்ந்து கொண்டார் என்பதுதான் வேடிக்கை.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் யூ டியூப் சானலிலிருந்து ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜான்சன் இங்கிலாந்து வீரர்களை தனது ஷாட் பிட்ச், பவுன்சர் பந்துகளில் மிரட்டியதன் வீடியோ தொகுப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பு அவர் ஜிம்பாவே வீரர்களுடன் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார்.
அதாவது மறுநாள் ஜான்சன் பவுலிங் நமக்கு இதையே செய்தாலும் செய்யும் என்ற நகைச்சுவை உணர்வுடன் அவர் அதனைப் பகிர்ந்த விளையாட்டுத் தனம் வினையாகப் போய் முடிந்தது.
ஒரு ஜோக் விவகாரத்தை சீரியசாக்கியுள்ளது ஜிம்பாவே கிரிக்கெட் வாரியம்.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி கண்ட ஜிம்பாவே அணி பன்யாங்கராவின் ஜோக்கை மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டதுதான் இப்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரிய ஜோக்காகியுள்ளது.