Published : 31 Jan 2024 07:56 AM
Last Updated : 31 Jan 2024 07:56 AM

கேலோ இந்தியா விளையாட்டு: 91 பதக்கங்கள் குவித்து தமிழகம் சாதனை

பளுதூக்குதலில் தங்கம் வென்ற ஆர்.பி.கீர்த்தனா

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி,மதுரை,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன.

மகளிருக்கான 81 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் ஆர்.பி.கீர்த்தனா 188 கிலோ (ஸ்னாட்ச் 85+கிளீன் & ஜெர்க் 103) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான கே.ஓவியா 184 கிலோ (ஸ்னாட்ச் 78+ கிளீன் & ஜெர்க் 106) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். உத்தரபிதேசத்தின் சந்துஷ்டி சவுத்ரி 162 கிலோ (ஸ்னாட்ச் 76+ கிளீன் & ஜெர்க் 86) எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதிப் போட்டியில் தமிழகத்தின் பிரனவ், மகாலிங்கம் ஜோடி 6-3 6-1 என்ற நேர் செட் கணக்கில் மகாராஷ்டிராவின் தனிஷ்க் முகேஷ் ஜாதவ், காஹிர் சமீர் வாரிக் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் - வென்றது.

மகளிர் இரட்டையர் பிரிவிலும் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது. தமிழகத்தின் மாயா ராஜசேகர் ரேவதி, லட்சுமி பிரபா ஜோடி இறுதிப் போட்டியில் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சுகிதா மருரி, ஸ்ரீநிதி பாலாஜி ஜோடியை வீழ்த்தியது. பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் மித்திஷ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

நீச்சல் போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் மெட்லியில் தமிழகத்தின் ஸ்ரீநிதி நடேசன் பந்தய தூரத்தை 2:26.78 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவின் சான்வி தேஷ்வால் (2:27.64) வெள்ளிப் பதக்கமும், ஷுப்ரன்ஷினி பிரியதர்ஷினி (2:31.60) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆடவருக்கான 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தமிழகத்தின் நித்திக் நாதெல்லா பந்தய தூரத்தை 2:04.60 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மகாராஷ்டிராவின் ரிஷப் அனுபம் தாஸ் (2:05.19) வெள்ளிப் பதக்கமும், கர்நாடகாவின் ஆகாஷ் மணி (2:07.25) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மகளிருக்கான 4x100 மீட்டர் மெட்லி தொடர் நீச்சல் போட்டியில் பிரமிதி ஞானசேகரன், எம் யு ஜாய்ஸ்ரீ, ஸ்ரீநிதி நடேசன், தீக்ஷா சிவகுமார் ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணிபந்தயதூரத் தை 6:09.57 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 12வது நாளின் முடிவில் பதக்கப் பட்டியலில் மகாராஷ்டிரா 53 தங்கம், 46 வெள்ளி, 50 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 149 பதக்கங்களை குவித்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஹரியாணா 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருந்தது. போட்டியை நடத்தும் தமிழகம் 35 தங்கம், 20 வெள்ளி, 36 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது.

கேலோ இந்தியா வரலாற்றில் தமிழகம் அதிக பதக்கங்கள் குவிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் புனேவில் நடந்த கேலோ இந்தியா இரண்டாவது பதிப்பில் அதிகபட்சமாக தமிழகம் 88 பதக்கங்கள் குவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x