Published : 30 Jan 2024 07:24 AM
Last Updated : 30 Jan 2024 07:24 AM
துபாய்: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி,ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள்பட்டியலில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராகஹைதராபாத்தில் நேற்றுமுன்தினம் நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் ஐசிசிஉலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்ததன் மூலம் புள்ளிகள்பட்டியலில் இந்திய அணி 54.16 வெற்றி சராசரியுடன் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் தற்போது இங்கிலாந்து அணியிடம்தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணியின் வெற்றி சராசரி 43.33 ஆக சரிந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 231 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியானது சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லியின் சுழலில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலிய அணி முதலிடம்: சொந்த மண்ணில் அரிதான வகையில் தோல்வியை சந்தித்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி சராசரி 55 உடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அந்த அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதிலும் புள்ளிகள் பட்டியலில் பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் தலா 50 வெற்றி சராசரியுடன் முறையே 2 முதல் 4-வது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT