Published : 29 Jan 2024 07:33 AM
Last Updated : 29 Jan 2024 07:33 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி

ஷமார் ஜோசப்

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஷமார் ஜோசப் அசத்தினார். இதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 311 ரன்களும், ஆஸ்திரேலியா 289 ரன்களும் எடுத்தன. 22 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 72.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதையடுத்து 216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 33, கேமரூன் கிரீன் 9 ரன்களுடன் தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். கேமரூன் கிரீன் 42 ரன்கள் எடுத்த நிலையில், ஷமார் ஜோசப்பின் அபாரமான பந்துவீச்சில் போல்டானார்.

இதைத் தொடர்ந்து விளையாட வந்த டிராவிஸ் ஹெட்டை முதல் பந்திலேயே போல்டாக்கி வெளியேற்றினார் ஷமார் ஜோசப். அடுத்ததாக களமிறங்கி விளையாட வந்த மிட்செல் மார்ஷ் 10 ரன்களில் ஷமார் ஜோசப் பந்துவீச்சில், ஜஸ்டின் கிரீவ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அலெக்ஸ் கேரியை 2 ரன்களிலேயே போல்டாக்கி வெளியேற்றினார் ஷமார் ஜோசப். ஒரு முனையில் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்தவாறு இருக்க ஸ்டீவ் ஸ்மித் மறுமுனையில் நங்கூரம் போல நின்று ரன்களைச் சேர்த்தவண்ணம் இருந்தார். ஆனாலும் ஷமார் ஜோசப் தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் மிட்செல் ஸ்டார்க்கை 21 ரன்களிலும், பேட் கம்மின்ஸை 2 ரன்களிலும், நேதன் லயனை 9 ரன்களிலும் வீழ்த்தினார்.

வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமேதேவையான நிலையில் கடைசி விக்கெட்டான ஜோஷ் ஹேசில்வுட்டையும் வீழ்த்தினார் ஷமார் ஜோசப். ரன் கணக்கை தொடங்காமலேயே ஆட்டமிழந்தார் ஹேசில்வுட்.

இதனால் 50.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்றது. ஸ்டீவ் ஸ்மித் மறுமுனையில் 91 ரன்கள் (9 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசியாக விழுந்த 8 விக்கெட்களில் 7 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஷமார் ஜோசப் 11.5 ஓவர்கள் பந்துவீசி 68 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களைச் சாய்த்து அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.

அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற சமனில் முடிவடைந்தது. ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஷமார் ஜோசப் கைப்பற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x