Published : 06 Feb 2018 03:50 PM
Last Updated : 06 Feb 2018 03:50 PM

சாஹலின் வெற்றியை அடுத்து லெக் ஸ்பின்னராகிறாரா அஸ்வின்?

இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் பரிசோதனை முறை பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் ஆஃப் ஸ்பின்னை ஒரு திடீர் பந்தாகவே வைத்திருந்தார்.

ஆனால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முனைகளிலும் இருவேறு பந்துகளில் வீச வேண்டியுள்ளதால் பந்து பெரும்பாலும் புதிதாகவே இருப்பதால் விரல்களால் ஸ்பின் செய்யும் வீச்சாளர்கள் குறைந்த ஓவர் போட்டிகளில் பழமையாகக் காட்சியளிக்கத் தொடங்கினர்.

அப்போதுதான் சாஹல், குல்தீப் யாதவ் என்ற ரிஸ்ட் ஸ்பின் இரட்டையர்கள் இந்திய அணியில் புகுந்து கலக்கத் தொடங்க அஸ்வினின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட், டி20 வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது.

இந்நிலையில் சதாசர்வகாலமும் தன் வாழ்நாளில் தன் பந்து வீச்சில் தானாகவே பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு கடினமாக உழைத்து வருகிறார் அஸ்வின். அவரது சமீபத்திய பரிசோதனை லெக்ஸ்பின் வீசுவதாகும். அதாவது ரிஸ்ட் ஸ்பின்னராக தன்னை வளர்த்தெடுத்துக் கொள்ளும் ஒரு கடினமான உழைப்பில் இறங்கியுள்ளார் அஸ்வின்.

நேற்று குஜராத்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் தனது பரிசோதனை பந்துவீச்சுடன் அவர் 9.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 38 ரன்கள் எடுக்க தமிழக அணி 76 ரன்களில் வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 2 பவுலர்களில் அஸ்வின் ஒருவர். தென் ஆப்பிரிக்கா தொடரில் செஞ்சூரியனில் அவர் சிறப்பாக வீசினார், ஆனால் அடுத்த போட்டியில் இல்லை, முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் அடித்து நொறுக்கிய தருணத்தில்  அஸ்வினைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. அஸ்வினை எல்லாப் பிட்ச்களிலும் பயன்படுத்தக்கூடிய அசாத்தியமான கேப்டன் இந்திய அணியில் இல்லாததால்தான் இந்த நிலை.

ஏகப்பட்ட பரிசோதனைப் பந்து வீச்சுகளைக் கொண்டுள்ள ஒரு ஸ்பின்னரை வெறும் ஆஃப் ஸ்பின்னரகா வரித்து இடது கை பேட்ஸ்மென்களுக்கு மட்டும்தான் சிறப்பாகத் திகழ்வார் என்ற ஒரு தவறான, கிரிக்கெட் அடிப்படை ஆதாரமற்ற, புரிதலைக் கொண்ட தோனியினால் முடிவெடுக்கப்பட்டு அதே தீர்மானம் கோலிக்கும் கையளிக்கப்பட்டது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அன்னிய சூழலிலும் ஒரு ஸ்பின்னரை திறம்படப் பயன்படுத்தும் கேப்டன் இல்லாததால் அஸ்வினின் குறைந்த ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அஸ்வின் தனக்குள்ளேயே சுயபரிசோதனை முயற்சிகளைத் தொடர்ந்து வருவது குறித்து கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட்டுக்குள் செல்லும் போது லெக்ஸ்பின் வீசுவது என்பது என் திட்டத்தின் ஒருபகுதி. என்னுடைய ஆயுதங்களை அதிகரிக்க விரும்புகிறேன். சென்னையில் லீக் கிரிக்கெட் ஆடும் போது எனது ஆஃப் ஸ்பின் ஆக்‌ஷனிலேயே லெக் பிரேக்குகளை வீசுவேன். ஆனால் என்னுடைய திடீர்ப்பந்தை சரியாக, சீராக வீச வேண்டியிருந்ததால் நிறைய நுணுக்கங்களைக் கைவிட வேண்டியதாயிற்று. ஆஃப் ஸ்பின் பந்தை திடீரென வீசும் பவுலராகவே 10 ஆண்டுகள் இருந்தேன். அதன் பிறகு முழு நேர ஆஃப் ஸ்பின்னராக மாறுவது சவாலாக இருந்தது. ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் இது தான் நமது இறுதி என்று முடிவு கட்டுவதில்லை. எனவே பரிசோதனை முயற்சிகள் என் பந்துவீச்சின் உள் அங்கமாகவே மாறிவிட்டது. என் கிரிக்கெட் வாழ்வில் இதுதான் நம் பந்து வீச்சு இதனைப் பற்றிக் கொள்வோம் என்று நான் ஒருநாளும் முடிவெடுத்ததில்லை.

இப்போதைக்கு அனைத்து பரிசோதனை முயற்சிகளும் என் சொந்த முயற்சியில் மேற்கொள்ளப்படுபவையே. அகாடமியில் பயிற்சியாளர்களிடமிருந்து பின்னூட்டம் பெறுவேன். எல்.பாலாஜி பெரிய உதவியாக இருக்கிறார். முதல் முறையாக் நான் லெக்ஸ்பின் வீசினேன். அதற்கான சரியான ஆக்‌ஷனை வருவித்துக் கொள்வதில் பயிற்சி செய்தேன். என் கை 45 டிகிரிக்குச் செல்லாது இது லெக்ஸ்பின்னுக்கு மிகத் துல்லியமான அம்சமாகும். நான் நேராக நிமிர்ந்தே வீசுவேன். நான் என் ஆக்‌ஷனை அட்ஜஸ்ட் செய்ய வேண்டு. இது ஒரு வலிநிரம்பிய மாற்று முயற்சியே. ஒருநாள் வலைப்பயிற்சியில் பந்துகள் நன்றாக விழும், அடுத்த நாள் நன்றாக விழாது. நீண்ட நாள் பயிற்சி, முயற்சிகளுக்குப் பிறகு நான் பந்தை எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அந்த இடத்தில் பிட்ச் செய்வதற்கான நீண்ட நாள் பயணமாகும் இது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடாதது ஏமாற்றமே:

நான் சற்றே ஏமாற்றமடைந்தேன் ஏனெனில் நான் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு இருந்து வருகிறேன். சேப்பாக்கத்தில் எனக்கென்று ஒரு தனி இடமே உண்டு. ஒவ்வொரு முறை பந்து வீச வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் என் மனதில் நீங்காமல் பதிவாகியுள்ளது. ஆனால் இங்கு வந்து சென்னை அணிக்கு எதிராக ஆடுவது இன்னும் உத்வேகமளிப்பதாக இருக்கும்,

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x